மனித ஆயுளை கூட்டும் உள நலம்.

by admin
21-Feb-2020

ஒரு மனிதன் தனது வாழ்க்கை சிறப்பாக அமைய உடல் ஆரோக்கியம் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது என எண்ணினால் அது தவறானது. ஆரோக்கியம் என்பது உடல், உள, சமூக, பொருளாதார மற்றும் ஆன்மீக காரணிகளை உள்ளடக்கியது. உண்மையில் உள ஆரோக்கியம் என்பது ஒருவரது வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானது. உள ஆரோக்கியம் ஒருவரது ஆயுட்காலத்தைக் கூட தீர்மானிக்க வல்லது என்றால் நம்புவீர்களா? இறுதியாக, இலங்கை தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, வவுனியா போன்ற பிரதேசங்களில் வாழும் மக்களின் ஆயுள், தேசிய ரீதியான ஒப்பீட்டளவில் மிகக் குறைவு என்ற செய்தி வெளியானது.

இதற்கு பல காரணங்களை குறிப்பிட்டு கூறலாம் உதாரணமாக பிரதேசத்தின் நீர் வளம், சூழல் மாசடைதல், இரசாயன பாவனை, போதைப்பொருட்களின் பாவனை, சமூகம் சார்ந்த சேவைகளின் கட்டமைப்பு, யுத்த பாதிப்பு என பல காரணங்களை குறிப்பிடலாம்.  அதேபோல் உள ரீதியான தாக்கங்களும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையினை ஆயுளை தீர்மானிக்கிறது.

உள மகிழ்ச்சியுடன் நாம் வாழ்வோமாயின் பல பிரச்சினைகளுக்கு இலகுவாக முகங்கொடுக்க முடியும். மக்கள் இன்றும் உள ரீதியான வலிகளுடன், உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களாக (இழப்புக்களுடன், சோகத்துடன்) நாட்களை கடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, காணமலாக்கப்பட்டோரின் உறவுகள், யுத்த விதவைகள் / பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், சொந்த நிலம் இன்றிய மக்கள், அனாதைகள் என பல்வேறு மன வலிகளுடன் இன்றும் பலர் இப்பிரதேசங்களில் ஜீவித்து வருகின்றனர்.

இவற்றுக்கு சமூகத்தின் பங்களிப்பு என்ன?

உலக உளநல தினம் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இத்தினம் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக உளநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. அவுஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் இக் காலப்பகுதி உளநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது. இலங்கை திருநாட்டில் வாழும் சகலரும் அன்பாகவும், பரஸ்பர புரிந்துணர்வுடனும், சமாதானத்துடனும் வாழ்வதுடன், வளமான ஒரு எதிர்காலம் அமைய, எமது எண்ணங்களிலும், செயற்பாடுகளிலும் ஒரு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த சமூகத்தின் உளநல மேம்பாடு தவிர்க்க முடியாத காரணியாக காணப்படுகிறது.

வன்முறை ஒருபோதும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை இறுதி யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த நாடு எதிர்கொள்ளும் அனுபவங்கள் வாயிலாக நாம் அறியலாம்.

எம் அனைவருக்கும் ஒரு சமூகப் பொறுப்பு இருக்கின்றது. குறிப்பாக, யுத்த அனுபவங்களில் வாழ்ந்த மக்கள் இனிவரும் சந்ததியை எப்படி வளர்க்கப் போகின்றனர் என்ற வழிகாட்டலை, ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை அரசு, அரச சார்பற்ற தரப்பினர், சமூக சேவை அமைப்புக்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் மேற்கொள்ள முடியும். பிழையான கற்பிதங்கள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையையும் பெரிதும் பாதித்துவிடும்.

நண்பர்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் உளநல ரீதியான பிரச்சினைகளை எதிர் கொள்பவர்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அவர்களை நாடிச் சென்று, அவர்களுக்கு உதவுவதற்கு நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதனை தெரியப்படுத்தல் அதாவது அவர்களிடம் உதவி செய்வதற்கு நாம் இருக்கின்றோம் என்பதை புரிய வைத்தல், உளநல சேவைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கும் குறித்த சேவைகளை முறையாக தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கும் உதவி செய்தல், ஏனையோரைப் போலவே மரியாதையுடன் அவர்களையும் நடத்துதல் போன்ற எமது சின்னஞ்சிறு செயற்பாடுகளினால் அவர்களது வாழ்வினை மேம்படுத்த உதவலாம்.

மேலும் திறந்தமட்ட கலந்துரையாடல்கள், அனுபவ பகிரல்கள், முறையான நகர்வுகள் போன்றன இளைய தலைமுறையை சிறந்த உள நலம் கொண்டவர்களாக கட்டாயம் எதிர்காலத்தில் மிளிரச் செய்யும்.

உறுதியான உள நலமிக்க ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு இலங்கையர்கள் நாம் இன்றே பிரார்த்திப்போம்!

இக்கட்டுரையானது குடும்ப புனர்வாழ்வு நிலையம் (FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் உளநல வாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளும் உளநல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Views:
716