கரைத்துறைப்பற்று பிரதேசத்தின் ஆளணிப்பற்றாக்குறை

by Shree
07-Nov-2017

எழுதியோர்

-சிவா

தர்ஷினி

கம்சியா

 

ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் வேலையில்லாப்பட்டாதாரிகள் தமக்கு வேலை வழங்குமாறு நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடாத்தி வரும் நிலையில் கரைத்துறைப்பற்று போன்ற இடங்களில் உள்ள கடும் ஆளணிப்பற்றாக்குறையானது  வழங்கப்படும் வேலைவாய்ப்புக்களும் திட்டமிட்ட முறையில் பகிர்ந்து வழங்கப்படாததை எடுத்துக்காட்டுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் உள்ள கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் பல்வேறு பிரிவுகளில் ஆளணிப்பற்றாக்குறை நிலவி வருவதால் பிரதேச சபையின் கீழ் உள்ள மக்களுக்கு அவர்களின் தேவைகளையும் சேவைகளையும் நிறைவேற்றுவதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாக கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சி. சபேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கரைத்துறை பிரதேச சபையானது 728.6 சதுரமைல் தூரம் கொண்ட ஒரு பரந்து பட்ட பிரதேச சபையாகும். இங்குள்ள 46 கிராம அலுவலர் பிரிவுகளிலும்மொத்தம் 12725 குடும்பங்களைச் சேர்ந்த 40556அங்கத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன் மாவட்டத்தின் தலைநகரமாக முல்லைத்தீவு உள்ளதால் இங்கு பல இடங்களில் இருந்தும் பொதுமக்கள் அரச உத்தியோகத்தர்கள் உட்பட்ட பலதரப்பினரும் ஆயிரக்கணக்கில் வருகை தருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இவர்களின் தேவைகளையும் அவர்களுக்கான சேவைகளையும் வழங்குவதில் ஆளணிப்பற்றாக்குறை காணப்படுகிறது.

எமது பிரதேச சபையின் ஆளணிப்பங்கீடானது அரசாங்கத்தினால், கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தரவிற்கு அமையவே நிரப்பப்படுகிறது. தற்போது மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளதால் ஆளணி மற்றும் வளப்பங்கீடுகளும் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது.

இது தொடர்பில் எமது மேலதிகாரிகளுக்கு தெரியபடுத்தியுள்ளோம்.

பிரதேச சபையின் கீழ உள்ள முள்ளியவளை முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு, செம்மலை, கொக்கிளாய் ஆகிய 5பிரதேசசபையின் உப அலுவலகங்கள் ஊடாக மக்களுக்கு சேவையாற்றி வருகின்றோம். சுகாதாரப்பணியாளர்கள் 16 பேருக்கான அனுமதி காணப்படும் நிலையில் இத்தொகை அதிகரிப்பானது இரட்டிப்பாக அதிகரிக்க வேண்டியுள்ளது. 4 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கடைமையாற்ற வேண்டிய நிலையில் 2 பேர் மட்டுமே கடைமையாற்றுகின்றனர்

முகாமைத்துவ உதவியாளர்கள் 15பேர் கடைமையாற்ற வேண்டிய நிலையில் தற்போது 12பேர் மட்டுமே கடமையாற்றுகின்றனர்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 8 பேர் கடைமையாற்ற வேண்டிய நிலையில் தற்போது 6 பேர் மட்டுமே கடமையாற்றுகின்றனர்.

நூலகர்கள் 3 பேர் தேவையானவிடத்து 3 இடங்களுமே வெற்றிடமாக உள்ளது.

ஆயுர் வேத வைத்தியர்கள் 3பேர் மட்டுமே தேவையான இடத்தில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி காணப்படுகிறது. இதனை 3ஆக அதிகரிக்கவேண்டும்.,

இதேபோல் சாரதிகள் 5 பேருக்கு மட்டுமே ஆளணி அனுமதி காணப்படுகிறது.பௌசர் வண்டிகள், கழிவு முகாமைத்துவ வண்டிகளின் சாரதிகள் பற்றாக்குறையாகவுள்ளதனால் இத்தொகையும் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறு பெரும் ஆளணிப்பற்றாக்குறை அவர்களது பிரதேசத்துக்கு இருந்தாலும் சிறப்பாக மக்களுக்கு சேவையாற்றி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உரிய அதிகாரிகள் இவற்றை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களானால் அப்பிரதேசத்துக்கு பேருதவியாக இருக்கும்.

 

Views:
655