தீபா மேத்தாவின் 'Anatomy of Violence'

by Shree
17-Jan-2018

கடந்த வாரம் BMICH இல் கனேடிய உயர் ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் UNFPA ஒருங்கிணைந்து வழங்கிய திரைப்பட வெளியீடு இடம்பெற்றிருந்தது.  இந்திய வம்சாவளியை சேர்ந்த கனேடிய இயக்குநர் தீபா மேத்தாவின் “The anatomy of violence” திரைப்படமும் அதனோடு இணைந்த கலந்துரையாடலிலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தீபா மேத்தா

இந்தியாவை உலுக்கிய ‘நிர்பயா’ கொலைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் ஓடும் பஸ்ஸில் வைத்து அவர்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிகளின் பார்வையில் அமைந்திருந்தது.

எந்த மனிதனும் தனியாக வளர்ந்து விடுவதில்லை. அவனை அவனாக அவன் சார்ந்த சமூகமே வளர்த்தெடுக்கிறது ஆகவே ஒவ்வொரு மனிதனின் குற்றத்திலும் சமூகத்தின் பங்கு இருக்கிறது. ஆணும் பெண்ணும் சொந்த வீட்டில் சரி சமனாக வளர்க்கப்படுகிறார்களா என்பதிலேயே குடும்பத்தின் பங்கு ஆரம்பித்து விடுகிறது என்ற செய்தியை அடிப்படையாக கொண்டே இத்திரைப்படத்தை உருவாக்கியதாக தீபா மேத்தா தொடர்ந்த கலந்துரையாடலில் தெரிவித்தார்.

ஒவ்வொரு குற்றவாளிகளின் வாழ்விலும் நடந்த சம்பவங்கள் அவர்களின் எண்ணப்போக்கு, செயற்பாடுகளை கட்டியெழுப்புவதில் எப்படிப்பங்கு வகித்தன என்பதை தனித்தனியாக காண்பித்திருந்தார் மேத்தா. இது அதிக நாடகத்தன்மையோடு இருந்ததோடு குற்றவாளிகள் பால் ஒரு இரக்கத்தையும் உருவாக்குவதாக விவாதத்தில் காரசாரமான கருத்து மோதல் இடம்பெற்றது.

மேத்தா அடிப்படையாக கொண்டதாக சொன்ன கருத்து சரியே ஆனாலும் அதை அந்த திரைப்படம் பிரதிபலித்ததா இல்லையா என்பது தான் விவாதப்பொருள் ஆகியிருந்தது.

எது எப்படியாயினும்ஆணுக்கோ பெண்ணுக்கோ, ஆண் பெண் பாரபட்சங்கள், பெண் என்பவள் கூட விருப்பு வெறுப்புக்கள் கொண்ட அனைத்து மனித உரிமைகளுக்கும் உரிய சக மனுஷி என்ற எண்ணத்தை உருவாக்குவதில் குடும்பமும் சமூகமும் பெரும் பங்கு வகிப்பது உண்மையே. சிறுவயதிலிருந்து சமத்துவத்தை ஊட்டி பாரபட்சமற்ற சமுதாயத்தை கட்டியெழுப்பும் போது இப்படியான குற்றங்கள் நாளடைவில் குறையவே செய்யும்.

Views:
761