ஏழாம் எட்டில் ஓய்வு காண வேண்டுமா?

by Tamil Manjari
07-Aug-2017

எட்டு எட்டாய் மனித வாழ்வை பிரித்துக்கொள், அதில் எந்த எட்டில் நீ இருக்கிறாய் என்று தெரிந்துகொள் என்று எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து நீ ஏழாம் எட்டில் காணாதது ஓய்வு இல்லை என்று அழுத்தமாய் சொல்கிறார்! இன்றைய நிலையில் 56 வயதில் ஓய்வு பெறுவது சரியா? அல்லது மக்களால் முடிகிறதா? இந்தக்கேள்வி நிச்சயம் விவாதத்துக்கு உரியதே!

இலங்கை மருத்துவ வசதிகளில், நோய்கள், கல்வி தொடர்பான விழிப்புணர்வில் முன்னேறி வருதல் போன்ற காரணங்கள்  பிறப்பு, இறப்பு வீதத்தை குறைத்து இலங்கைப் பிரஜை ஒருவரின்  சராசரி ஆயுட்காலத்தை எழுபதுக்கும் மேலாக அதிகரித்திருக்கிறது. உலக வங்கியின் தகவல்படி 2013 இல்  இலங்கையில் ஒரு பெண்ணின் சராசரி ஆயுட்காலம் 77.42 ஆக எதிர்பார்க்கப்படும் அதே வேளை ஆணினுடைய ஆயுட்காலம் 71.21 ஆக எதிர்பார்க்கப்படுகிறது.

2041 ஆம் ஆண்டளவில் முதியோர் வீதம் 25% ஆக அதிகரிக்கும் அதாவது இலங்கையின் குடித்தொகையில் நால்வரில் ஒருவர் அறுபது வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார் என ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியத்தின் வெளியீடான 20.4 மில்லியன் தெரிவிக்கிறது. இது ஒரு சாதகமான விடயமே. அறுபது ஆண்டுகள் அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்த முதியோர்கள் இனிவரும் இளைய தலைமுறைக்கு நிச்சயம் வழிகாட்டலாக அமைவார்கள்.

ஆனால் பாதகமான அம்சங்களும் உண்டு! உழைக்கும் வர்க்கத்தினரில் 30 வயதுக்கு உட்பட்டோரை விட முதியோர் எண்ணிக்கை அதிகரித்தலானது  நாட்டின் பொருளாதாரத்தில் தங்கி வாழ்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயத்தை காட்டுகிறது. உழைக்கும் வர்க்கத்தினரிடம் தங்கிவாழ்வது முதியோர்களுக்குமே பொருளாதார ரீதியில் மற்றும் உணர்வு ரீதியாக பாதுகாப்பற்ற நிலையை தோற்றுவிக்கக்கூடும். ஆகவே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களும் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கும் வாய்ப்பையும் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் பாதுகாப்பையும் வழங்குவது அவசியமாகும்

இது தொடர்பில் சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சென்றவாரம் பாணந்துறையில் கருத்து தெரிவிக்கையில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தனிப்பட்ட ரீதியில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அறுபதாக இருப்பதில் தனக்கும் நேர்மறையான அபிப்ராயமே இருப்பதாக தெரிவித்திருந்தார். இது பல்வேறுபட்ட தரப்பினரதும் கவனத்தை ஈர்த்த விடயமொன்றாகி இருக்கிறது! ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பது நிச்சயம் நாடு எதிர்கொள்ளப்போகும் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும் தான் இருப்பினும் இதில் தீமையான விளைவுகளும் உள்ளன என்று ஒரு சாரார் வாதிடுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பாடசாலை அதிபரான ஜெயக்குமாரிடம் பேசிய போது அவர் இத்திட்டத்தை ஆணித்தரமாக வரவேற்றார். “எனக்கு இப்போது அறுபத்தொரு வயது. சென்றவருடம் என் வயதினால் ஓய்வு பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும் மனதாலும் உடலாலும் ஓய்வில் இருக்கக்கூடிய நிலைக்கு நான் இன்னும் வரவில்லை. ஆகவே இரண்டு மாதங்களிலேயே எனக்கு மனதளவில் பெரும்  விரக்தி ஏற்படவே தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்றில் வேலை தேடிக்கொண்டேன். என்னை பொறுத்தவரை உடல்தகுதி ரீதியிலும் தனிநபர் விருப்பின் அடிப்படையிலும் ஓய்வு பெறும் வயதை தீர்மானிப்பது சிறந்தது. எப்படியிருந்தாலும் அறுபது வயதென்பது தற்காலத்தில் மிக மிக குறைந்ததே!” என்றார் அவர்.

“எங்கள் நாட்டில் நான்கு வருட பட்டத்தை கையில் வாங்கி வெளிவரும்போது குறைந்த பட்சம் நமக்கு இருபத்தைந்து வயதாகிவிடுகிறது! பிறகு மேற்படிப்பு, ஒரு தொழிலில் நம்மை ஸ்திரப்படுத்தல் என்று மேலும் இரண்டு வருடங்களை விழுங்கி விட முப்பதில் தான் திருமணம் பற்றி யோசிக்கவே முடிந்தது! என் இரண்டாவது குழந்தை பிறந்தபோது என் வயது முப்பத்து ஏழு! இப்போதைய ஓய்வு பெறும் வயதெல்லையான அறுபது வயதில் அவளுக்கு வெறும் முன்னிருபதுகள் நடந்து கொண்டிருக்கும்! அந்த வயதில் என்னால்  ஓய்வு பெறுதலை பற்றி சிந்தித்தும் பார்க்க முடியாது!” என்றார் நாற்பது வயதான அரச ஊழியரான பிரதீபன்.

இருவரது வாதங்களும் சரியே. நாட்டின் கல்விநிலை வளர்ச்சி, பெண்கல்வி விழிப்புணர்வு போன்ற சாதகமான விடயங்கள் திருமணம் மற்றும் முதல் குழந்தை பெறும் வயது என்பவற்றை பிற்போட அறுபது வயதில் ஓய்வு என்பது ஆட்டமிழக்கும் முன்னரே மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களின் மனோநிலைக்கு மக்களைத் தள்ளப்போகிறது! ஜெயக்குமார் சொன்னது போல பொறுப்புக்களும் ஓய்வின் பின்னே என்ன செய்யப்போகிறோம் போன்ற கவலைகளும் சேர்ந்து கொண்டு அறுபது வயது நெருங்க நெருங்க உளரீதியான அழுத்தங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்! உடலாலும் மனத்தாலும் இயலும் நிலையில் உள்ளவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக தங்கி வாழ்வோர் நிலைக்கு அறுபது வயதில் தள்ளப்பட வேண்டும்? அத்தோடு அனுபவமும் அறிவும் வாய்ந்த வயதானோர் தங்களுக்கு கீழான இளைஞர்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பும் அதிகரிக்கிறதே! பெரும் பணம் செலவு செய்து இலவச கல்வியை அளிக்கும் அதனால் பயன்பெற்ற மக்களை நாட்டின் பொருளாதாரத்துக்காய் வினைத்திறனுடன் பயன்படுத்திக்கொள்வதற்கும் இது வழி வகுக்கும்! ஆகவே அறுபத்தைந்து வயதாக ஓய்வு பெரும் வயதெல்லையை அதிகரிப்பதை ஆதரிப்போம் என்று முடிவு செய்தால் அதிலும் சில பிரச்சனைகள் உண்டென்கிறார்கள் மறுசாரார்.

நிரூபன், பேராதனை பல்கலைக்கழக இறுதிவருட மாணவர் இந்த திட்டத்தை பயத்தோடு தான் பார்க்கிறார். ஏற்கனவே நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை இது மேலும் அதிகரித்து விடும் என்பது அவரது பயமாக இருக்கிறது. ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் அதே நேரம் அரசாங்கம் இளைஞர் வேலைவாய்ப்பு சம்பந்தமாகவும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

இளைஞர்களோடு ஒப்பிடும் போது பொதுவாக அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களின் வேலை வினைத்திறன் வயதினால் ஏற்படும் உடல் மனத்தளர்ச்சி காரணமாக குறைந்து விடும். இது ஒவ்வொருவருடையதும் ஆரோக்கியநிலையில் தங்கியிருக்கிறது, சிலரால் அறுபது வயதுக்கு மேலும் சுறுசுறுப்பாய் வேலை செய்ய முடியும் போது சிலரின் உடல் அறுபது வயதுக்குமேல் ஓய்வு கேட்கும்.

ஆகவே அறுபதில் தடை தாண்டல் பரீட்சை போல ஓவ்வொரு ஊழியரும் சுய விருப்பத்தின் அடிப்படையில் மருத்துவ ரீதியாக தன் உடல் தகுதியையும் அலுவலகத்தில் செயல்திறன் மதிப்பீடு மூலம் அவருடைய வேலை வினைத்திறனையும் உறுதி செய்தபிறகே அறுபத்தைந்து வயதுவரை தொடர அனுமதி வழங்கப்படுவது நலம். அதிலும் செயல்திறன் மதிப்பீட்டறிக்கை விடயத்தில் சாதி, இனம், மத, தனிப்பட்ட பாரபட்சமோ, லஞ்சம் வழங்குதலோ அன்றி நேர்மையான முறையில் முடிவுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தல் அரசாங்கத்தின் கடமையாகும்!

இலங்கையின் அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கையும் அதனால் எழும் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று நம்புகிறீர்களா? உங்கள் ஆலோசனையை எங்களிடம் தெரிவியுங்கள்

 

 

 

 

Views:
925