ஈச்சிலம்பற்று:நாம் கடக்கவேண்டிய தூரம் இன்னும் அதிகம்

by Tamil Manjari
18-Jul-2017

ஈச்சிலம்பற்று தென் திருகோணமலை பகுதியில் அமைந்துள்ளது. திருகோணமலையில் இருந்து முக்கால் மணிநேரம் பயணம் செய்தால் காடுகள், விவசாய நிலங்கள் என்று பெரும் கட்டுமானங்கள் அற்ற சுற்றுப்புறச்சூழலில்  சிறு சிறு வீடுகளோடு அமைதியாக இருக்கிறது ஈச்சிலம்பற்று சுகாதாரப்பிரிவின் பூநகர் கிராமம். கடும் யுத்தத்தின் பிடியில் சிக்கியிருந்த பிரதேசங்களில் இதுவும் ஒன்றாக இருந்ததன் அடையாளங்கள் ஆங்காங்கே இன்னும் மிஞ்சிக்கிடக்கின்றன.

8 கிராம சேவகர் பிரிவுகளை கொண்டிருக்கும் ஈச்சிலம்பற்றில் கிட்டத்தட்ட 3௦௦௦ குடும்பத்தினர் வாழ்கிறார்கள். 195 கர்ப்பிணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் இத்தனை பேருக்கும் 4 பொதுச் சுகாதார தாதிகளே பணியில் ஈடுபட்டுள்ளார்கள். பொது சுகாதார வைத்தியசாலை மிகக்குறைந்தளவு வசதிகளையே கொண்டிருப்பதால் பிரசவத்தின் போது தாங்கள் பல மைல் பயணம் செய்து திருகோணமலை அரச வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியிருக்கிறது என்று அங்குள்ள பெண்கள் தங்கள் வருத்தத்தினை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

 

இந்தப்பிரதேசத்தில் பணியாற்ற வைத்தியர்களோ பொது சுகாதார தாதிகளோ விருப்பம் காண்பிப்பதில்லை ஆகையால் தேவையான அளவு பணியார்களை பெற்றுக்கொள்வது மிகச்சிரமமாக இருக்கிறது. ஆகவே இருக்கும் வளங்களை வைத்துக்கொண்டு நம்மால் முடிந்தவரை நாம் பணியாற்றி வருகிறோம். தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தைகள் சதவீதத்தை 15% இலிருந்து 1௦௦% ஆக அதிகரித்தது இப்பிரதேசத்தில் எம்முடைய சாதனைகளில் ஒன்றுஎன்று அப்பிரதேசத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி  Dr. முரளி தெரிவித்தார்.

அருள்ராஜா கௌரி, இப்பிரதேசத்துக்கான பொது சுகாதாரத்தாதிகளின் மேற்பார்வையாளர்(SPHM) இப்பிரதேசம் குறித்த தனது பார்வையினை பகிர்ந்து கொண்டார். 

ஈச்சிலம்பற்று பகுதியை பொறுத்தவரை முக்கியமான பிரச்சனையாக காணப்படுவது சிறுவயதில் திருமணம் செய்தலும், பதின் வயதில் கர்ப்பமாதலும் ஆகும். பதினேழு வயதில் திருமணம் செய்து கொண்டால் தாயின் பதின் வயதுகளிலேயே குழந்தை உருவாகிறது. அது தாய்க்கும் குழந்தைக்கும் பல்வேறு பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது.

நாங்கள் பாடசாலைகளிலும் இளைஞர்கள் மத்தியிலும் பாலியல் மற்றும் இனப்பெருக்க கல்வி மற்றும் உரிமைகள் தொடர்பிலும் பதின் வயதுக்கர்ப்பமாதல் தொடர்பிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பாடசாலைகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து இதற்கு எமக்கு சிறப்பான ஒத்துழைப்பு கிடைக்கிறது. இந்த வருடம் மட்டும் 15 பதின் வயதுக்கர்ப்பங்கள் பதிவானது இதன் அபாயநிலையை காட்டுகிறது.

நான் பணி புரியும் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் ஒரு பதின்மூன்று வயது சிறுமி திடீரென கர்ப்பமாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டாள். அவளின் தாயும் தந்தையும் வேலைக்கு செல்பவர்கள் எனவும் தொலைக்காட்சி பார்க்கசென்ற இடத்தில் அயலவர் ஒருவர் மூலம் அவளுக்கு குழந்தை உருவானதும் அந்த சிறுமி அது குறித்த எந்த விழிப்புணர்வும் இன்றி இருந்ததும் தெரிந்து எல்லோரும் அதிர்ச்சியடைந்தார்கள். இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்று தான் சொல்லவேண்டும். பாடசாலைகள் எங்களை விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு வரவேற்கிறார்கள். எல்லோருமாக சேர்ந்து இந்நிலையை இல்லாதொழிக்க போராடி வருகிறோம்.

ஆனால் எங்களுக்கு நிறைய சவால்களும் உள்ளன. ஆங்காங்கே தூரமாக வீடுகளைக்கொண்ட போக்குவரத்து வசதிகள் குறைந்த பிரதேசமாதலால் நாங்கள் மோட்டார் வண்டியிலேயே பயணம் செய்கிறோம். நான்கு பேர் எட்டு கிராம சேவகர் பிரிவுகளை பொறுப்பேற்றிருப்பதால் பயணத்திலேயே பெரும்பாலான நேரம் கழிந்து விடுகின்றது.பொது மருத்துவ தாதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமாயின் இங்குள்ள சுகாதார வசதிகளை முன்னேற்றுவதற்கு இயலும்

 

இலங்கையின் குடும்ப சுகாதார அமைப்பின் புள்ளி விபரங்களின் படி 90% ஆன கர்ப்பிணித்தாய்மார்கள் பொது சுகாதார தாதிகளால் சென்று பார்க்கப்படுகிறார்கள். ஆனால் எவ்வளவு சவால்களுக்கு மத்தியில் அவர்கள் அதை சாதிக்கிறார்கள் என்பது ஈச்சிலம்பற்றில் அவர்களோடு பேசியபோதுதான் தெரிகிறது.  பொது சுகாதாரத்தாதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தலும் அவர்களுக்கு போதுமான வசதிகளை வழங்குதலும் நாட்டில் கர்ப்பிணித்தாய்மார் நலனை முன்னேற்றுவதற்கு  பேருதவி செய்யும் என்றால் மிகையில்லை.

Views:
1693

2017

0 votes
எமது பிரதேசத்தில் இளைஞர்களுடைய ஒற்றுமையின்மை காணப்படுகிறது அதனை எவ்வாறு தீர்த்தல்
The problem
இளைஞர்களை ஒற்றுமை என்கிற ஒரு குடையின் கீழ் கொண்டுவருதல். முதல் இளைஞர்களின் ஒற்றுமையின் சக்தியை இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு நமது பிரதேசத்தில் கருத்தரங்குகள்,பயிற்சி பட்டறைகள், விளையாட்டுகள் போன்ற பல செயற்பாடுகள் மூலம் இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமையின் சக்தியை புரியவைத்தல்.
The solution
இளைஞர்களை ஒற்றுமை என்கிற ஒரு குடையின் கீழ் கொண்டுவருதல். முதல் இளைஞர்களின் ஒற்றுமையின் சக்தியை இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு நமது பிரதேசத்தில் கருத்தரங்குகள்,பயிற்சி பட்டறைகள், விளையாட்டுகள் போன்ற பல செயற்பாடுகள் மூலம் இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமையின் சக்தியை புரியவைத்தல்.
Budget

125000

by Zajeeth