காலத்தின் தேவை

by Shree
08-Nov-2018

மாறி வரும் சமுதாயத்துக்கு ஏற்ப கல்வியும் மாற வேண்டியது அவசியம் ஆகும். இப்போதெல்லாம் இணையம் தங்குதடையின்றி அனைவர்க்கும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இணையத்தில் கிடைக்கும் தகவல்களை கட்டுப்படுத்த பெரும்பாலும் முடிவதேயில்லை. அவை சரியான தகவல்களாக இருக்கலாம், பிழையான தகவல்களாக இருக்கலாம். எல்லாமே தங்குதடையின்றி இளையோருக்கு கிடைக்கிறது. முதிர்ச்சியான மனநிலையுடன் சரி, தவறு புரிந்து அவற்றை எடுத்துக்கொள்ள சமூகம் அவர்களை எதிர்பார்க்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக எல்லா இளைஞர்களும் அவ்வகை முதிர்ச்சியுடன் இருப்பதில்லை.

அந்த வகையில் முக்கிய இடம் பெறும் ஒன்று தான் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரக்கல்வி ஆகும். சமூகத்தில் மனந்திறந்து பேசவே தயங்கும் இவ்விடயத்தை பற்றி தெரிந்து கொள்ளும் வடிகால் பெரும்பாலும் இளைஞர்களுக்கு இணையமாகவே அமைந்து விடுகிறது. அதில் கிடைக்கும் தவறான தகவல்களை அவர்கள் நம்பி ஏற்றுக்கொண்டால் அது ஏற்படுத்தும் தவறான விளைவுகள் மிகவும் பாரதூரமானவை. பாலியல் துஷ்பிரயோகங்கள், வற்புறுத்தல், பதின் வயதுக்கர்ப்பங்கள், கல்வியை தொடரமுடியாது போதல், கல்வியில் ஆர்வம் குறைதல், தவறான பழக்கவழக்கங்கள் போன்ற விடயங்களால் ஆக்கபூர்வமாக செலவு செய்ய வேண்டிய இளமைக்காலம் வீணாகவே போய்விடும் அபாயம் ஏற்படும். இதனாலேயே பாடசாலை முதற்கொண்டு அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வயதுக்கு தகுந்த பாலியல் மற்றும் இனவிருத்திக்கல்வி மிகவும் அவசியமாகும். அது சரியான விடயங்களை தெரிந்து கொள்ளவும் அறிவார்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளவும் இளைஞர்களை வழி நடத்தும்.

சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் பருவ வயது இளைஞர்களுக்கான பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார வழிகாட்டி ஒன்றினை வெளியிட்டிருந்தது. இந்த இணைப்பில் அந்த வழிகாட்டியினை பார்வையிடலாம்.

WHO recommendations on adolescent sexual and reproductive health and rights 

சரியான அறிவும், வழிகாட்டலும் இளைஞர்களை தம் வாழ்க்கை குறித்த அறிவார்ந்த தீர்மானங்களை எடுக்க உதவி புரியும் 

 

படங்கள் WHO வழிகாட்டியிலிருந்து 

Views:
1448