யுத்தம் முடிவுற்ற நிலையிலும் உளநல ரீதியான பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை!

by Yamini Perera
19-Nov-2019

யுத்தத்திற்கு பின்னரான வாழ்க்கையில் அல்லது நல்வாழ்வில் உளவியல் ரீதியான பிரச்சினைகளின் தாக்கங்கள் சாதாரணமானதாகவும் பொதுவானதுமாகும். வடக்கில் யுத்த ஓய்வின் பின்னரான இன்றைய சூழலில் மக்கள் அபிவிருத்தி என்ற பார்வையினை நோக்கி நகர முற்பட்டாலும் தினமும் இடம்பெறும் இளவயதினரின் தற்கொலைகளும், வன்முறைகளும் நீதிமன்றங்களில் நாளாந்தம் இடம்பெறும் விவாகரத்து வழக்குகளையும்   பார்க்கும்போது யுத்தம் முடிவுற்ற நிலையிலும் மக்களின் உளரீதியான பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை.

 

யுத்தத்திற்கு பின்னரான வாழ்க்கையில் தமது சொந்த இடங்களுக்கு மீண்டுவரும் மக்கள் அங்கே குறிப்பிடுமளவான சேவைகளோ வசதிகளோ இல்லாது அவதியுறும் நிலைமை அவர்களை இன்னும் உள ரீதியாக தாக்கம் செலுத்தி அவர்களை உளவியல் ரீதியாக பலவீனமானவர்களாக மாற்றியுள்ளது. 

 

குறிப்பாக மீள்குடியேறிய மக்கள் குறிப்பிடும் பிரச்சினைகளானது தமது காணிகள் பறிபோனமை, அரைகுறை வீட்டுத்திட்டங்களை பூரணப்படுத்த பெறப்பட்ட கடன் சுமைகள், மாதாந்த கட்டுப்பணத்திற்கு வீட்டுப்பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்தமையினால் ஏற்பட்ட நெருக்கடிகள், நுண்நிதி கடன்கள், உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகளாகும். அது தவிர இளம்வயது திருமணம், இளவயது விதவை வாழ்க்கை, முன்னாள் போராளிகளுக்கான சீராகாத சமூக அங்கிகாரம், போரினால் மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டவர்களின் இயங்குநிலை உள்ளிட்ட சமூக பிரச்சனைகளுக்கும் முகங்கொடுத்து வருவதாக அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

சரியான பொருளாதார பின்னணி இல்லாத குடும்பத்தை சார்ந்த இளைஞர்கள் படித்த படிப்பிற்கான வேலை சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் இளைமையில் வறுமையை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ள வடக்கு மாகாணத்தில் குறைந்தது ஆயிரம் இளைஞர்கள் பணிபுரியக்கூடிய ஒரு தொழிற்சாலைகூட இல்லாத நிலையில் படித்து முடித்த இளைஞர்கள் வீதிகளில் நிற்பதோடு போதைப் பழக்கத்திற்கும் ஆளாகின்றார்கள்.

 

அதேபோல் போரின் போது குடும்ப தலைவர்களை இழந்து குடும்பத்தின் தலைமையை ஏற்றுள்ள பெண்கள் உளரீதியான தாக்கங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். இந்த பெண்களையே நுண்நிதி கடன் நிறுவனங்களும், குத்தகை நிறுவனங்களும் இலக்குவைத்து அவர்களை மேலும் மன அழுத்தங்குக்கு உள்ளாக்குவதுடன் அவர்களின் பொருளாதார இயலாமையை தவறாக பயன்படுத்த முற்படுகின்றனர். இதனால் பாதிக்கப்பட பலர் தற்கொலை செய்துள்ளதுடன் சிலர் தவறான பாதைகளையும் தெரிவு செய்கின்றனர். 

 

இவ்வாறாக வடக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் இன்றுவரை உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கம் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வந்தாலும் இன்னும் துரிதபடுத்துவதன் தேவை காணப்படுகின்றது. அதையும் தாண்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான உளவளத்துணைச் சேவைகள் மற்றும் உள நல சிகிச்சைகளை வழங்கி அவர்களை அவர்களுக்கே உணரச்செய்து அவர்களுக்கு நம்பிகையூட்டுவதன் மூலமே அவர்களை சாதாரண வாழ்கை முறைக்கு கொண்டுவர முடியும் என்பதோடு அவர்களில் உளநல பிரச்சினைகளுக்கான காரணங்களையும் இனம்கண்டு அவற்றையும் தீர்க்க முற்பட வேண்டும். அதேபோல் சூழவுள்ள சமூகமும் பாதிக்கப்பட்ட மக்களுக்களின் முன்னேற்றத்துக்கு பங்குதாரர்களாக இருத்தல் வேண்டும்.

 

இக்கட்டுரையானது குடும்ப புனர்வாழ்வு நிலையம் (FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF)இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் உளநல வாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளும் உளநல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

ஜனகன் நடராசா.

 

Views:
868