பேருந்து ஓட்டுனராக ஆரம்பித்து பிரதேச சபை உறுப்பினர் வரை: திருமதி. அஞ்சலா கோகிலக்குமாரின் கதை

by Shree
25-Jun-2018

காலை 6.30 மணியளவில் வவுனியா- கிடாச்சுரி பாதையில் பஸ்ஸுக்காக காத்துக்கொண்டிருந்திருப்பீர்களானால் நீங்களும் அஞ்சலாவை சந்தித்திருக்கக்கூடும். தினமும் தவறாது அந்த பாதையில் வண்டியோட்டி வந்த அஞ்சலாவுக்கு வயது இப்போது 36. 2007 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட பதினொரு வருடங்களாக ஒருநாளைக்கு மூன்று முறை பேருந்தை ஓட்டியிருக்கிறார் அஞ்சலா.

“ஆரம்பத்தில் ஏறப்பயப்பட்டு என் பஸ்ஸை தவிர்த்தவர்களையும் என் பஸ்ஸுக்காக காத்திருக்க வைத்தது தான் என் சாதனை” என்கிறார் அஞ்சலா பெரிய புன்னகையுடன்.

ஆனால் பஸ் ஓட்டுவது அனேகமாக பெண்கள் செய்யாததொரு வேலை. பொதுவாகவே எம் சமூகத்தில் மக்கள் பெண் ஓட்டுனர்களை நம்புவதில்லை. அது தான் முதலில் அஞ்சலாவை பஸ்ஸில் கண்டதும் மக்கள் தயங்கினார்கள். அவர் பொறுமையாகவும், பாதுகாப்பாகவும் வண்டியோட்டி தன்னை நிரூபித்ததும் அவர்களுக்கு அஞ்சலாவின் வண்டியில் பயணிக்க எந்த தடையும் இருக்கவில்லை. பெண் ஒருத்தி இருக்குமிடம் ஆண்கள் இருப்பதை விட வேறானது. பெண்கள் இலகுவாக பழகி நட்புணர்வை ஏற்படுத்தி விடுவார்கள். அலுவலகத்துக்கு செல்லும் பெண்களை ஓட்டுனர் ஆசனத்தில் இருந்து ஒரு பெண் நலம் விசாரிப்பதும், பயணத்தின் போது பெண்கள் கூட தயக்கமின்றி உரையாட முடிவதும், அதைவிட பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்வதும் அவரது பஸ்ஸை மக்கள் விரும்ப காரணமாக இருக்கலாம் என்பது அஞ்சலாவின் கருத்து.

அஞ்சலா பஸ் ஒட்டுனரானது ஒரு சுவாரஸ்யமான கதை. திருமணத்தின் பின் வீட்டில் பிள்ளைகளை கவனித்துக்கொண்டிருந்த அஞ்சலாவின் கணவர் 4-5 பஸ்களை வைத்து நிர்வகித்திருக்கிறார். இடப்பெயர்வு பிரச்சனை காரணமாக அவர் வெளிநாடு செல்ல நினைத்ததும் தமக்கு பதிலாக நிர்வகிக்க மனைவியை தயார் செய்திருக்கிறார்.

சொந்தமாக உங்களுக்கு ஓட்டத் தெரியாவிட்டால் உங்களால் இத்தனை பஸ்களை வைத்து நிர்வகிக்க முடியாது. குறைந்த பட்சம் ஒரு ஓட்டுனர் உரிமம் ஆவது வைத்திருக்க வேண்டும் என்ற அவரின் தூண்டுகோலுக்கு முதலில் தயங்கினாலும் அஞ்சலாவும் உடன் பட்டு விட்டார். ஓட்டுனர் உரிமமும் கிடைத்தது. ஒரு நாள் அவர்களுடைய ஒரு பஸ்ஸை ஓட்ட வேண்டிய ஓட்டுனர் வரவில்லை, அது கட்டாயமாக செல்ல வேண்டிய ஒரு பயணம். ஆகவே ஓட்டுனர் உரிமம் வைத்திருந்த அஞ்சலாவை அப்பொறுப்பு வந்தடைந்தது. இது தான் அஞ்சலாவின் முதல் பஸ் பயணம் ஒரு ஓட்டுனராக. பேருந்து ஓட்டும் போது கிடைத்த தன்னம்பிக்கையும் சுதந்திர உணர்வும் அஞ்சலாவுக்கும் பிடித்துப்போனதில் அவரது பயணம் 11 வருடங்களாக தொடர்ந்தது.

அஞ்சலாவுக்கு ஒரு மகனும் மகளுமாய் 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். பெண்கள் சரி சமமாக சந்தர்ப்பங்களை பெற்று பயன்படுத்த வேண்டும் என்பது கணவர் மனைவி இருவரினதும் உறுதியான நம்பிக்கையாகும். அஞ்சலாவின் பஸ்ஸில் அவரது கணவர் செல்வக்குமார் தான் அனேகமாக அஞ்சலாவின் பஸ்ஸில் டிக்கட் சேகரிப்பவராக வருவார் என்பதனால் எனக்கு இரட்டிப்பு பலம் என்று சிரிக்கிறார் அஞ்சலா.

இப்படியே போய்க்கொண்டிருந்த அவரது பயணத்தில் கடந்த வருட தேர்தல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. 25% இட ஒதுக்கீடு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் கட்சிகள் மக்களுக்கு அறிமுகமான சமூகத்துக்காக உழைக்கக்கூடிய பெண் முகங்களை தேடிய போது தமிழ் கட்சி ஒன்று அஞ்சலாவையும் அணுகியது. மீண்டும் அவரது கணவர் உற்சாகப்படுத்த சிறிது தயங்கினாலும் உற்சாகமாகவே தேர்தலில் கலந்து கொண்டார் அஞ்சலா.

“கட்சி பேதமில்லாமல் நான் உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவள், உங்களை சேர்ந்தவள், நம் பிரச்சனைகளை ஒன்றாக இணைந்து நாம் தீர்ப்போம் என்று கூறித்தான் நான் வாக்குக்கேட்டேன். மக்கள் நம்பி வாக்களித்தார்கள். அதனால் நான் இப்போது ஓமந்தை தணிச்சர் புளியங்குளம் பகுதியின் பிரதேச சபை உறுப்பினர்” என்றார் அவர்.

இப்போதைக்கு என் நோக்கமெல்லாம் எங்கள் பகுதியின் முன்னேற்றத்துக்கு என்ன செய்யமுடியுமோ அவ்வளவையும் செய்வது தான். இப்போது நான் பஸ் ஓடுவதில்லை. இப்போது முதற்கட்டமாக எங்கள் பகுதியின் 26 கிராமங்களில் வீதி விளக்குகளை பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம். சின்ன மாற்றங்களே ஆயினும், சமுதாய அபிவிருத்திக்கு எங்களால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று சொன்ன அஞ்சலாவின் குரலில் அத்தனை உறுதி!

 

Views:
763