அதிகரிக்கும் பதின் வயதுக்கர்ப்பங்கள்

by Shree
06-Sep-2017

“விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றிக்கோப்பையை ஜெயிக்கும் மகிழ்வை விட வாழ்க்கையில் அப்போதெல்லாம் எனக்கு எதுவுமே முக்கியமானதாக இருந்ததில்லை” தர்ஷினி எம்மிடம் சொன்னபோது லேசாகக்கலங்கிய அவர் விழிகள் தூரத்தே தெரிந்த பாடசாலை மைதானத்தில் நிலைகுத்தியிருந்தன. “படிக்கும் போது நான் வகுப்பறையில் இருந்ததைவிட விளையாட்டுமைதானத்தில் இருந்தது தான் அதிகம்! என் வயது மாணவர்களோடு மட்டுமில்லை பெரியவர்களின் விளையாட்டுக்களில் கலந்து கொண்டு அவர்களோடு என்னை ஒப்பிட்டுப்பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்! வெகுசில சமயங்களில் அவர்களை ஜெயிக்கும் போது கிடைக்கும் பூரிப்பு வார்த்தையால் சொல்ல முடியாதது! ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருந்தது! என் வகுப்பாசிரியர்களுக்கு என் ஒழுங்கின்மை கோபத்தை அளிக்க விளைவு மாதம் ஒரு தடவையேனும் என் பெற்றோர்கள் பாடசாலை வரவேண்டியிருந்தது!” பழைய நினைவுகளில் முகத்தில் புன்னகை எட்டிப்பார்க்கிறது.

“நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அப்பா செல்லம்! என் பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள். அவர்களின் ஆசையெல்லாம் நான் படித்து ஒரு நல்ல வேலையில் அமர வேண்டும், நாளைக்கு வேலை கிடைக்குமோ என்ற நிச்சயமில்லா நிலையில் இருந்து நானாவது விடுபடவேண்டும் என்பதுதான். ஆனால் எனக்கோ சிறுவயதிலிருந்தே விளையாட்டு ஆசிரியை ஆகவேண்டும் என்று தான் ஆசை! அதிகம் சிரமப்படாமல் படிக்கலாம் என்பதோடு ஓய்வு பெறும் வயதுவரை இந்த மைதானத்தையும் விளையாட்டுக்களையும் பிரியாமல் இருக்கமுடியும் அல்லவா? எனக்குத்தெரிந்த நுட்பங்களை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்கள் போட்டிகளில் பங்குபெற்றும் போது உற்சாகப்படுத்தும் ஆசிரியராக இருக்கவேண்டும் என்று அப்போது கனவு கண்டேன். ஆனால் என் போக்கை முதலில் பெற்றோர் புரிந்துகொள்ளவில்லை. இரண்டு வருடங்கள் அவர்களுக்கும் எனக்கும் பெரும் போராட்டமாகத்தான் இருந்தது. பிறகு என்னை புரிந்து கொண்டு ஊக்கமளித்தார்கள். என் பதின் மூன்று வயதுவரை எல்லாம் நன்றாகத்தான் போனது. தொடர்ந்து நீளம் பாய்தல், உயரம் பாய்தல் போட்டிகளில் மாவட்டத்தில் முதலாவதாகவும் நான் வர என் பெற்றோர் பெருமைப்பட்டார்கள்!” தர்ஷினியின் முகத்தில் பெருமையின் சாயல்.

தர்ஷினியின் பதினாலாவது வயதில் தான் எல்லாம் மாறிப்போயிருக்கிறது. கிளிநொச்சியை அரவணைத்துக்கொண்ட யுத்தம் தர்ஷினியின் குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. இடப்பெயர்வுகள், மீண்டும் வீடுதிரும்பல் தொடர்ச்சியாக நிகழத்தொடங்க மாணவர்களின் கல்வியே கேள்விக்குறியான போது விளையாட்டுக்கள் எங்கனம் நடைபெறமுடியும்? தன் எதிர்காலமே கேள்விக்குறியானது போல மனம் உடைந்து போயிருந்தாள் தர்ஷினி. இதெல்லாம் ஒன்றுமே இல்லாதது போல குண்டுவீச்சொன்றில் ஸ்தலத்திலேயே தந்தை பலியாகவும் அக்குடும்பம் உடைந்தே போனது. யுத்தகாலத்தில் ஒரு இளம்பெண்ணை என்னால் தனியாக காப்பாற்ற முடியுமா என்று அவளுடைய தாயார் பயப்பட ஆரம்பித்தார். வறுமை வேறு அவர்களை வாட்ட ஆரம்பித்தது. உறவினர்கள் நண்பர்களை ஆலோசித்து கூலிவேலை செய்யும் குமாருக்கு தர்ஷினி மணமுடித்து வைக்கப்பட்டாள். முற்றிலும் உடைந்து போயிருந்த தர்ஷினிக்கும் அப்போது அதை விட வேறு வழி தோன்றவில்லை. விளைவு 17 வயது ஆனபோது தர்ஷினியின் கையில் இரண்டு பெண்குழந்தைகள்! யுத்தம் முடிந்து மீண்டும் இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரும் நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் அம்மாவுக்கும் குமாரின் உழைப்பு போதாமலிருக்கவே தானும் கூலிவேலைக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார் தர்ஷினி.

“என் மூத்த மகள் பாடசாலை செல்லத்தொடங்கி விட்டாள். அவளுக்கும் என்னைப்போலவே விளையாட்டில் தான் ஆர்வம்!!” சிரிக்கிறார் தர்ஷினி. ” என்னைப்போலில்லாமல் என் குழந்தைகளை எப்பாடு பட்டேனும் அவர்கள் விரும்பிய துறையில் வளர்த்தேடுப்பேன் ” என்று உறுதியாய் சொன்ன தர்ஷினியின் கண்களில் அத்தனை உறுதி.

தர்ஷினியின் வாழ்க்கையில் பதின்வயதுக்கர்ப்பத்துக்கு யுத்தம் காரணமானது போல குடும்ப வறுமை, பெற்றோரின் பேராசை, கல்வியறிவின்மை, சமூகப்பழக்கங்கள், சம்பந்தப்பட்ட பெண்களே பதின் வயதுகளில் காதல் என்று தடம்மாறுதல், பெற்றோரின் கவனிப்பின்மை, அம்மா வெளிநாட்டில் வேலை பார்த்தல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைக்கு ஆளாதல் என்று பல காரணங்கள் பெண்களை பதின் வயதுக்கர்ப்பங்களை நோக்கி தள்ளுகின்றன.

இலங்கையில் சராசரி பதின் வயதுக்கர்ப்ப வீதம் 6.5% உடன் வருடாந்தம் குறைந்து செல்லும் போக்கைக்காண்பித்தாலும் சில மாவட்டங்களில் ((உ +ம்: வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவ) அது அபாயத்துக்குரிய அளவில் வருடாந்த அதிகரிப்பையும் காண்பிப்பதால் பதின் வயதுக்கர்ப்பங்கள் இலங்கையின் முக்கியப்பிரச்சனைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?

பதின் வயதுகளில் கர்ப்பம் தரித்தலால் என்ன பிரச்சனை நேர்கிறது?

படித்துக்கொண்டிருக்கும் பெண்களின் கல்வி தடைப்படுகிறது. உரிய கல்வி இல்லையெனில் நல்ல வேலைவாய்ப்புக்களை அந்தப்பெண்ணால் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. யாரையேனும் தங்கி வாழ வேண்டிய நிலை ஏற்படும். இருபதுகளில் தடையின்றி படித்து தன் முழு திறமையையும் பயன்படுத்தி அந்த பெண் வாழ்க்கையில் அடையக்கூடிய நிலையிலும் மிகப்பல படிகள் கீழேயே இருக்க வேண்டி நேரிடும். முறையான கல்வியை முடித்திருக்காததால் சரியான வேலை கிடைக்காமல் மீண்டும் வறுமைக்குள் மாட்டிக்கொள்ளும் இக்கட்டு நிலை ஏற்படும்.

கல்வி அறிவு குறைந்த பெண்களிடையே தான் பதின் வயது கர்ப்பங்கள் அதிகம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆகவே கர்ப்ப காலத்தில் தாய் சேய் உடல்நலம் பேணுதல், பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரத்தில் போதுமான அறிவு இன்மை என்பன தாய் சேய் இருவர் உடல்நலத்தையும் பாதிக்கும். பெற்றோரின் ஆதரவு இன்றி திருமணம் செய்த பதின் வயதுப்பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உண்ணவேண்டிய போஷாக்கான உணவுகள் பற்றிய போதுமான அறிவும் தயாரிக்கும் திறனும் இல்லாமல் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்! அது தவிர்த்து உயர் குருதி அழுத்தம், எடை குறைந்த குழந்தைப்பிறப்பு போன்ற பதின் வயதுக்கர்ப்பங்களுக்கே உரிய மருத்துவச்சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புண்டு.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு தங்கள் தோற்றம் குறித்த தாழ்வுமனப்பான்மை, தங்களுக்கு நிகழும் மாற்றங்கள் குறித்த அச்சம் போன்ற உணர்வுகள் தனியாக வாழும் பதின் வயது பெண்களுக்கு கர்ப்ப காலத்தை உளவியல் ரீதியாகவும் கஷ்டமானதாக்கிவிடக்கூடும்.

மொத்தத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை பெறுவது என்பது இலகுவானது அல்ல. உரியவயது வந்த பெண்களுக்கு ஏற்படும் அனுபவத்தை விட பதின் வயது கர்ப்பங்கள் உடல் உள ரீதியில் மிகமிகக் கடினமானவை

இந்த பிரச்னையை எப்படித்தீர்க்கலாம்?

பெற்றோர்களின் பங்களிப்பு மகத்தானது. பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம் தொடர்பாக குழந்தைகளுடன் பேசுதலையே தீண்டத்தகாத விடயமாக ஒதுக்காமல் பதின் வயது பிள்ளைகளுக்கு தோழன் அல்லது தோழி போல அது தொடர்பான விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பிரதேசங்களில் பெற்றோரில் ஒருவரையேனும் இருவரையேனும் இழந்த பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. பெற்றோர் ஒருவர் இருந்தாலும் வேலை நிமித்தம் அவர் வெளியே போகும் போது பெரியோரின் கண்காணிப்பில் இருந்தும் அரவணைப்பில் இருந்து வெளியே வரும் பிள்ளைகள் தவறான தொடர்புகள் மூலம் பதின் வயதுக்கர்ப்பத்துக்கு ஆளாக முடியும். ஆகவே வேலை நிமித்தம் வெளியே செல்ல வேண்டிய பெற்றோராய் இருந்தாலும் இளவயதுப்பிள்ளைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு தங்கள் அன்பும் ஆதரவும் உண்டு என்று புரியவைக்கவேண்டும். பிரச்சனைகளை கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்.பாதுகாப்பான துணையுடன் மட்டுமே பிள்ளைகளை அனுமதிக்க வேண்டும். இது மனவியல் ரீதியாக ஆதரவு தேடி பிள்ளைகள் தவறான நபர்களுடன் பழகுவதை தவிர்க்கும்.

மொபைல் போனின் தவறான பாவனையும் மிக ஆபத்தானது. பதின் வயது பிள்ளைகளின் மொபைல் போன் பாவனை மற்றும் சமூக வலைத்தள நடவடிக்கைகள் பாதுகாப்பானதுதான் என்று உறுதி செய்யும் கடமை பெற்றோருக்கே உண்டு. அதிகமாக கிராமப்புறங்களில் தாங்கள் சிறுவயதுகளில் திருமணம் செய்து கொண்டதால் தங்கள் குழந்தைகளையும் கட்டாயப்படுத்தும் தாய்மார் உண்டு. சில சமூகங்களில் இளவயதில் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தல் கௌரவமாக கருதப்படும் அதே வேளை இருபதைத்தாண்டி திருமணம் ஆகாத பெண் குறைவுள்ளவள் போல நோக்கப்படுகிறாள். இப்படியான கலாச்சாரம், சமூகம் சார்ந்த மனப்பாங்குகள் மாற்றம் பெறவேண்டும்.

பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம் தொடர்பில் பரந்து பட்ட விழிப்புணர்வு கிராமப்புறங்கள் வரை எடுத்துச்செல்லப்படவேண்டும். பாடசாலைகள் மாணவர்களுக்கு குறிப்பாக பதின் வயதுப்பெண்களுக்கு கல்வி சார் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வை ஊட்டி அறிவார்ந்த முடிவெடுக்க உதவ வேண்டும்.

இருபதுக்கு குறைந்த வயதெனில் ஆணோ பெண்ணோ இருவருமே குழந்தைகளே. அவர்கள் மேல் குடும்ப சுமையை சுமத்தாமல் அவ்வண்ணாத்துப்பூச்சி பருவத்தின் மகிழ்வையும் அவர்களே தங்கள் வாழ்க்கை தொடர்பாக அறிவு சார் முடிவுகளை எடுக்கக்கூடிய விதத்தில் அவர்களை பலப்படுத்தலும் சுற்றியிருக்கும் சமூகமான நமதும் கடமையாகும்.

feature image source: https://pixabay.com/p-1681181/?no_redirect

Views:
988