சமூக ஒருங்கிணைப்பிலிருந்து தூரமாக்கப்பட்டுள்ள முன்னால் பெண் போராளிகள்

by Hasarel Gallage
29-Mar-2019

- கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவகம் (ESDF), மட்டக்களப்பு -

யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டமும் ஒன்றாகும். யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்தின் பாதிப்புக்களை இன்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணக்கூடியதாகவே உள்ளது. இந்த நிலைமையானது முன்னால் பெண் போராளிகளை பொருத்தவரையில் மிகவும் பாரதூரமான பிரச்சினையாக தற்போது உருபெற்று வருகின்றது.

முதலாவது பிரச்சினையாகக் காணப்படுவது, முன்னால் போராளிகள் தொடர்பான புள்ளிவிபரங்கள் எந்தவொரு அரச திணைக்களங்களிலும் இல்லை. எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கான முன்னால் போராளிகள் காணப்படுவதாகவும், அவர்களுக்கு எந்தவிதமான அரசின் உதவிகளும் கிடைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இரண்டாவது பிரச்சினையாகக் காணப்படுவது, யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள் கடந்த நிலையிலும் இவர்கள் சமூக ஒருங்கிணைப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களாகவே காணப்படுவதாக உணருகின்றார்கள். இவர்களை தீண்டத் தகாத ஒரு சமூகமாகவே தங்களது சொந்தக் கிராமங்களில் நடாத்தப்படுகின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் இரண்டு வகையான முன்னால் போரளிகள் காணப்படுகின்றார்கள். முதலாவதாக புனருத்தாபனம் செய்யப்பட்டவர்கள், இரண்டாவதாக புனருத்தாபனம் செய்யப்படாதவர்கள். பெரும்பாலும் தற்போது சவால்களுக்கு முகம் கொடுத்து வருபவர்கள் புனருத்தாபனம் செய்யப்படாமல் வாழ்கின்ற முன்னால் போராளிகளே.

கிழக்க மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளைப் பொறுத்தவரை, புனர்வாழ்வு செல்லாதவர்களைவிட, புனர்வாழ்வுக்குச் சென்றுவந்தவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையினரே உள்ளனர்.

புனர்வாழ்வு பெற்று வந்தவர்களுக்கு வீட்டுத்திட்டம், மற்றும் குறைந்தளவிலான வாழ்வாதாரம் என்பன அரசினால் வழங்கப்பட்டுள்ளதே தவிர, இவை ஒரு நிரந்தர வாழ்க்கைகக்கு வழிவகுக்காததாக தெரியவில்லை. இறுதியுத்தத்தில் வெளியேறிய புனர்வாழ்வு பெற்ற, புணர்வாழ்வு பெற்றுக்கொள்ளாதவர்களுக்கும் அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்துக்காக (இந்தியன் விட்டுத்திட்டம் 5 ½, 8 ½ இலட்சம்) வழங்கப்பட்ட கொடுப்பனவு போதியதாக இல்லாததால், அதிகமான வீடுகள் அரைகுறையாகப் பூர்;த்தி செய்யப்படாமல் உள்ளன. எடுத்துக்காட்டாக கதவுகளோ, யன்னல்களோ பொருத்துவதற்குக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை. இதனால் இந்த வீடுகளில் வாழும் பெண்கள் பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்வதோடு, இது ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதைத் தடைசெய்வதாக உள்ளது. சில பெண்கள் வீட்டுவேலையினைப் பூரணமாக முடிப்பதற்குப் பல நுண்கடன்களை எடுத்துள்ளனர். தற்போது அவற்றைத் திரும்ப செலுத்தமுடியாமல் திண்டாடுகின்றனர். நுண்கடன் நிறுவனங்களின் நெருக்கீட்டினால், தமது பிள்ளைகளைக் கணவர் அல்லது உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு சில பெண்கள் மத்தியகிழக்கிற்குத் தொழிலுக்காகச் சென்றுள்ளனர். இதனால் இவர்களது பிள்ளைகள் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களால் அனுப்பப்பட்ட பணத்தைக் கணவன்மார் தவறாகப்பயன்;படுத்தியும் உள்ளனர். இதனால் குறித்த பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். (நேர்காணல்:  11.2.2019)

குடும்ப வாழ்க்கையில் உள்ள சவால்கள்

அதிகமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபடாத ஆண்களைத் திருமணம் செய்துள்ளதால் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாமல் திண்டாடுகின்றனர். இதற்குக் காரணம்: புரிந்துணர்வில்லா கணவர். அதாவது, இந்தப் பெண்களை ஆண் அரச படைகள் விசாரணைக்காக வீட்டுக்கு வந்து விசாரிக்கும்போதும், இப்பெண்கள் தம்முடன் ஏற்கனவே அமைப்பில் இருந்த நண்பர்களைக் கண்டால் பேசிப்பழகும்போதும் சந்தேகம் கொள்கின்றனர். இது வன்முறையாக உருவெடுத்துக் குடும்பப் பிரிவில் முடிவடைகின்றது. இவ்வாறான பல சம்பவங்களை கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவகம் பதிவு செய்துள்ளது.

அரச உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள நெருக்கீடு

கிழக்க மாகாணத்தில் அதிகமான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்குச் செல்லவில்லை என்பது உலகறிந்த உண்மை. ஆனால், புனர்வாழ்வுக்குச் செல்லாதவர்களுக்கு எந்த அரச உதவியும் வழங்கப்படுவதில்லை. புனர்வாழ்வு செல்லாத ஆண்கள் ஏதும் கூலித் தொழிலைச் செய்து பிழைத்தாலும், பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடுகின்றனர். அவ்வாறு அரச உதவி கேட்டுச்சென்றால், புனர்வாழ்வில் இருந்ததற்கான ஆதாரம் கேட்பதோடு, சில அரச அதிகாரிகள் 'உதவி வேண்டுமென்றால் புனர்வாழ்வுக்குச் செல்லுங்கள்' என்று உரத்த தொனியில் மிரட்டுகின்றனர். (நேர்காணல்:  11.2.2019)

அதிகமான பெண்கள் அரச உதவி கேட்பதைத் தவிர்த்துள்ளனர். ஏனெனில், இவர்கள் தங்களை முன்னாள் போராளி என எங்கும் பதிவு செய்யாததால், அரச உதவி கேட்டுச் சென்றால் 'முன்னாள் போராளி' என அடையாளப்படுத்தி, விசாரணை மற்றும், புனர்வாழ்வுக்கு அனுப்பிவிடுவார்கள் என்ற பயம், அவ்வாறு சென்றால், தமது பிள்ளைகள் தனித்துவிடுவார்கள், குடும்பத்தைப் பிரியவேண்டிய நிலை ஏற்படும் என அஞ்சுகின்றனர்.

அரச படைகளின் நெருக்கீடும், தொடர் கண்காணிப்பும்

அரச புலனாய்வு ஆண் உத்தியோகத்தர்கள் முன்னாள் போராளிகளை எப்பவும் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். அதிகமான பெண்கள் ஊரில் தகவல் வழங்குனராகச் செயற்படுமாறும், அதற்கு அரச கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் பலவந்தப்படுத்தப்பட்டுள்ளனர். சில பெண்கள் பயத்தினாலும், வறுமையினாலும் இதற்கு உடன்பட்டு தகவல் வழங்கிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான பெண்கள் சந்தேகத்துடனும், காட்டிக்கொடுப்பவர்கள், நடத்தை கெட்டவர்கள் என்ற அவப்பேருடனும் நோக்கப்பட்டு, சமுகத்தால் ஒதுக்கப்படுகின்றனர்.

இதற்கு உடன்படாத பெண்கள் எப்பொழுதும் அரச புலனாய்வு உத்தியோகத்தர்களால் கைத்தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். நேர்காணல்:  (11.02.2019)

வாழ்வாதாரப் பிரச்சினை

அதிகமான பெண்கள் கல்வி அறிவு குறைந்தவர்களாக இருப்பதால், அரச தொழில்களுக்கோ, அதிக வருமானம் தரும் தொழில்களுக்கோ நுழையமுடியாமல் உள்ளனர். இது கணவனை இழந்த, கணவனைத் தொலைத்த, திருமணம் செய்யாமல் இருக்கின்ற பெண்களை அதிகம் பாதித்துள்ளது. இவ்வாறான பெண்கள் கூலித்தொழில்களுக்கு முயற்சிக்கும்போது, அவை மறுக்கப்படுவதுடன், உள்வாங்கப்படுபவர்கள் ஏதும் பிரச்சினை ஏற்படும்போது, முன்னாள்போராளி என்பதை அடையாளப்படுத்தி, முன்னாள்போராளிப் பெண்கள் பல ஆண்களுடன் இருந்த துர்நடத்தை உடையவர்கள், நம்பிக்கையற்றவர்கள் என மற்றவர்களால் துஞ்சிக்கப்படுகின்றனர். இவர்களில் அதிகமான பெண்கள் அன்றாடம் உண்ண உணவுக்குக்கூட வழியற்றவர்களாகவே இருப்பதுடன், இன்னுமொரு குறைந்த வருமானம் பெறும் உறவினரில் தங்கியிருப்பவர்களாகவே உள்ளனர்.

இவர்களில் பலர் தமது கணவரை இழந்தும், தொலைத்தும் உள்ளனர். இவர்கள் தமது பிள்ளைகளின் கல்விக்கான செலவு தொடர்பிலும் சிக்கலான நிலையில் உள்ளனர். (நேர்காணல்: 11.02.2019), (குழுக் கலந்துரையாடல்: 04.02.2019)

வாகன அனுமதிப் பத்திரம் பெறமுடியாமை

முன்னாள் போராளிகளில் அதிகமானவர்கள் அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் ஏற்கனவே வாகனங்கள் செலுத்திய அனுபவம் உடையவர்களாகவும், நன்கு வாகனங்களைச் செலுத்தும் திறன் உடையவர்களாகவும் உள்ளனர். ஆனால், இவர்களது அங்கவீனத்தைக் காரணம்காட்டி அனுமதிப்பத்திரம் மறுக்கப்படுகின்றது. (நேர்காணல்: 11.02.2019)

உளரீதியான பாதிப்பு

தற்போது சமுகத்தில் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளாலும் உளரீதியாக பாதிக்கப்படுபவர்கள் ஆண்களைவிட பெண்களாகவே உள்ளனர். ஆண்கள் குநை;தது அன்றாடம் உணவு உண்ணக்கூடிய கூலித்தொழிலைச் செய்தாலும், வீட்டுவேலையுடன், வெளிவேலைகளில் அதிகம் ஈடுபடுபவர்களாகப் பெண்கள் இருக்கின்றனர். இவர்கள் தமது முன்னாள் வாழ்க்கையை அடிமனதில் புதைத்துவிட்டு வெளியில் போலி வாழ்க்கை வாழ்கின்றனர்.

அதிகமான பெண்கள் அச்சம், பதட்டம், வியர்த்தல், நித்திரை குறைவு போன்ற பதகளிப்பு நிலையில் உள்ளனர்.

இன்னும் சிலர் தாம் தமது வாழ்க்கையில் அனைத்தையும் இழந்துவிட்டோம் (கல்வி, இளமைக் காலம், உடல் அங்கங்கள்...), இனி இதிலிருந்து மீளமுடியாது என்ற விரக்தியுடனும், 'முன்னாள் போராளி' என்ற அடையாளத்தை வெறுப்பவர்களாகவும், தமது சக நண்பர்களுடன் ஒப்பிடும்போது பொருளாதாரத்திலும் தாம் மிகவும் பின்தங்கிய நிலையில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களாகவும் எண்ணி மிகவும் மனவருத்தத்துடனும் காணப்படுகின்றனர்.

இப்பெண்களின் குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை அதிகமான பெண்கள் புரிந்துணர்வற்ற கணவன்மாரால் குடும்ப வன்முறை, சந்தேகம், குடும்பம் பிரிவு போன்றவற்றுக்கு உட்பட்டு, எப்பவும் கண்ணீருடனும், மனவேதனையுடனும், இச்சந்தர்ப்பத்தில் தமது முன்னாள் வாழ்க்கையை அடிக்கடி மீட்டிப்பார்ப்பவர்களாகவும் உள்ளனர். இது பல பெண்களின் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுவதாக அறியக்கிடைக்கின்றது. (நேர்காணல்:  11.02.2019), (குழுக் கலந்துரையாடல்: 04.02.2019)

சிபாரிசு

அரசு அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னாள் போராளிகளான பெண்களைத் தனித்தனியாக அணுகி, அவர்களது தேவைகளைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு வழிகாட்டி, அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த உறவினர்கள், சமுகத்தவர்கள், மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கும் இவர்களை அணுகவேண்டிய விதம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் நிரந்தர வாழ்வாதாரத்தில் முக்கிய கவனம் செலுத்தினால் முன்னாள்போராளிகளாக பெண்களை அவர்களது பிரச்சினைகளிலிருந்து மீட்கப்பண்ணி, இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யலாம்.

Views:
2333