வயதாதல் ஒரு சாதனையே!

by Shree
09-Oct-2017

 

1 அக்டோபர் 2017, சர்வதேச வயதானோர் தினத்தையொட்டி ஐக்கியநாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைப்பிரதிநிதி திருமதி. ரிட்சு நக்கீன் எழுதிய பதிவு

வயதாதல் பிரச்சனை என் மனத்துக்கு மிகவும் நெருக்கமானதொன்று. ஏனென்றால் நான் உலகிலேயே அதிக சதவீதமான வயதானோர்களை கொண்டுள்ள நாடான ஜப்பானில் இருந்து வருகிறேன். 2050 களில் கிட்டத்தட்ட 50% ஆன ஜப்பான் குடித்தொகை 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். இந்த விடயத்தில் ஒரு நாடாக நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மிக அதிகம். கற்றல் இன்னும் தொடர்கிறது.

ஜப்பானில் மூத்தமகனின் மனைவியே பெற்றோரின் தாய் தந்தையை கவனித்துக்கொள்ளவேண்டும் என்பது கலாச்சார வழக்கம். என் அம்மா அப்படியானதொரு நிலைமையில் இருந்தார். அவரும் அப்போது வேலை செய்து கொண்டிருந்தார் அதற்குள்ளும் அவருக்கு 8 மணிநேரம் ரயில் பயணம் செய்து நடமாடமுடியாதிருந்த என் தந்தைவழி பாட்டியை கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. இது எங்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகளை உருவாக்கியது. ஒரு மகளாக என் 15 வயதிலேயே குடும்பத்தின் பொறுப்புக்களை நானும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இது ஜப்பானில் பல குடும்பங்களில் இருக்கும் பொதுவான நிலைமையே. போதுமான பராமரிப்பு வசதிகள் இல்லாமல் பாரம்பரியத்தை விட்டு விடவும் முடியாமல் பொறுப்புக்களில் சிக்கிக்கொள்ளும் குடும்பங்களில் துன்புறுத்தல்கள், கவனிப்பின்மை, தற்கொலை, சில சமயங்களில் வயதானோர்களை கொலை செய்து விடுதல் கூட நடப்பதுண்டு. இந்தப்பிரச்சனை அனேகமாக பெண்கள் மீது பாரமாக சுமத்தப்பட்டு தொழில் செய்யும் குடித்தொகைக்கான  அவர்களது வினைத்திறனான பங்களிப்பை பாதிக்கின்றது.

ஆனால் உண்மையில் வயதாதல் ஆனது இவ்வாறு இருக்க வேண்டியதில்லை. அது நமக்கு பாரமும் அல்ல. வயதாதல் அபிவிருத்தியின் ஒரு சாதனையே. ஏனெனில் அது மக்கள் சரியான போஷணை உணவுகள் கிடைக்கப்பெற்று நீண்டகாலம் வாழ்கிறார்கள் என்பதை குறிக்கிறது. அது முறையான சுகாதார வசதிகளின் கிடைப்பனவை குறிக்கிறது. சிறந்த கல்வியையும் பொருளாதார நல்வாழ்வையும் குறிக்கிறது.

2030 களில் இலங்கையில் ஐந்தில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டிருப்பார் என்று கணிக்கப்படுகிறது. இவர்கள் சமுதாயத்தில் முக்கிய பங்காற்றக்கூடிய 20 சதவீதமான குடித்தொகையாகும். இவர்கள் சமூகத்துக்கு ஆசிரியர்களாக, தொழிலாளர்களாக, பராமரிப்பாளர்களாக, அறிவின் மூலங்களாக மற்றும் வரலாற்று ஞாபகங்களாக பயன்படமுடியும். அவர்கள் குடும்பங்களில், சமூகங்களில் அவசர நிலைமைகளில் உருவாகும் பிரச்சனைகளை தீர்க்கும் முக்கியமான தலைவர்களுமாவர்.

ஆனால் போகப்போக அவர்களுக்கு பராமரிப்பு தேவைப்படுகிறது. அனேகமாக அது குடும்பங்களில் இருக்கும் பெண்களின் மீது தான் வந்து சேர்கிறது. தற்போதைய இனவிருத்தி வீதம் குறைந்த, நகரமயமாக்கப்படும் சமூகத்தில் முதியோரை அவர்களது குடும்பங்கள் மட்டுமே பராமரித்தல் என்பது ஜப்பானில் இருந்த என் நிலைமை போல சிறந்த தீர்வாகாது. ஆகவே தான் அரசாங்கம், தனியார் துறை, சமூகம் ஒன்றிணைந்த சமூகப்பாதுகாப்பு செயன்முறைகள் தேவைப்படுகின்றன. இது ஓரிரவில் செய்து முடித்து விட முடியாதது. ஆகவே இலங்கையில் 2030 ஆம் ஆண்டளவில் உருவாகப்போகும் 4.7 மில்லியன் வயதானோருக்கு உரிய சமூகப்பாதுகாப்பை வழங்கக்கூடிய  வயதானோர் பராமரிப்பு செயன்முறைகள் இருப்பதை உறுதிப்படுத்துவதோடு தகுந்த கொள்கைகளையும் அமுலுக்கு கொண்டு வர வேண்டும். 

வரப்போகும் சனத்தொகை கட்டமைப்பு மாற்றத்தில் இருந்து உரிய பலன்களை அறுவடை செய்துகொள்ள நாம் தயாராக இருத்தல் அவசியம். அதற்காக முதலில் வயதாகும் குடித்தொகை குறித்த நேர்மறையான எண்ணத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். புரிந்துணர்வும் புதிய மனநிலையும் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க இந்த வயதாதலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முடியும். விரைவான பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொள்ளுதல் சற்றே கடினமானது ஏனெனில் இந்த வயதாதல் பிரச்சனையோடு இனவிருத்தி வீதம் குறைதலும் குடித்தொகை வளர்ச்சி வீதம் குறைதலும் சேர்ந்தே வரும். பதிலாக நாங்கள் எங்களுடைய கவனத்தை ஒரு நிலைபேறான, அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான சமுதாயத்தை நோக்கி குவித்து அதற்காக உழைக்கலாம்.  

இலங்கை இளைஞர்களின் மேல் முதலீடு செய்யவேண்டியதும் மிக முக்கியமானதாகும்.  அதேநேரம் ஆரோக்கியமான மற்றும் வினைத்திறனான இளைஞர்கள் இப்போதுள்ள வயதானோருக்கு உதவ வேண்டியது மிக முக்கியமாகும். இளைஞர்களுக்கு முறையான கல்வி, வேலைவாய்ப்பு, இனப்பெருக்க சுகாதார சேவைகளும் தகவல்களும்  கிடைக்கப்பெறுவதும் அவர்கள் தங்கள் திறனை முழுமையாக பயன்படுத்த அவசியமானவை. இது அவர்கள் தொழில் புரியும் குடித்தொகையில் வினைத்திறனாக பணிபுரியவும் தங்கி வாழும் குடித்தொகைக்கு ஆதாரமாகவும் வழிவகுக்கும். அத்தோடு இப்போதுள்ள இளைஞர்கள் மீது முதலீடு செய்வதானது வருங்கால முதியவர்களின் மீது முதலீடு செய்வதுமாகும். இளைஞர்கள் தங்கள் கல்வி, அறிவு, சுகாதாரம் திறன்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன்மூலம் எதிர்காலத்தில் தங்கள் முதிய வயதில் தங்களை பேணும் அளவுக்கு தயாராக முடியும். இதன் மூலம் சமுதாயத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை மறையும். இதனாலேயே சில நாடுகள் இளைஞர்களின் முக்கியமாக இளம் பெண்களின் பொருளாதார முகாமைத்துவ திறன்களை விருத்தி செய்வதில் கவனம் செலுத்துகின்றன. ஏனெனில் பெண்களே ஆண்களை காட்டிலும் அதிக நாள் வாழ்பவர்கள் ஆனால் அவர்களை விட அதிகம் வறுமைக்குள் தள்ளப்படுபவர்கள் ஆவர்.

வயதானோரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொள்கைகளும் செயற்றிட்டங்களும் உருவாக்கப்படுவது அவசியம். இது விசேட தேவையுள்ள வயதானோர், மனநிலை பாதிக்கப்பட்ட வயதானோர், தனிமையில் வாழ்பவர்கள், குடும்பத்துக்கு தலைமைதாங்கும் வயதான பெண்கள் ஆகியோரையும் உள்ளடக்கும். இந்த வகையானோரே அதிகம் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாகுபாட்டுக்கு ஆளாபவர்கள் ஆவர்.

இவ்விடயத்தில் பிறநாடுகளின் அனுபவப்படி அனைவராலும் பெற இயலக்கூடிய பராமரிப்பு வசதிகள் சமூகம் சார் பராமரிப்பு வசதிகள், முதியோர் இல்லங்கள் ஆகியனவற்றுக்கான வாய்ப்புக்கள் கொண்ட சூழலை உருவாக்குவது மிக முக்கியமாகும். முதியோர் இல்லங்கள் தொடர்பான சமூகத்தின் கண்ணோட்டம் மாற்றப்பட வேண்டும் ஏனெனில் சில சமயங்களில் முதியோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அது மட்டுமே பாதுகாப்பான ஒரு வழியாக இருக்கிறது. முதியோர் இல்லங்களில் கவனிப்பின்மை மற்றும் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்த முறையான பராமரிப்புத்தரக்கட்டுப்பாட்டு முறைகள் உருவாக்கப்பட்டு அமுல் படுத்தப்பட வேண்டும்.

2030  ஆண்டை நோக்கிய நிலைபேறான அபிவிருத்தி திட்டத்தில் இலங்கை பங்கெடுக்கும் போது வயதாகும் குடித்தொகை கொண்ட நாடாக கருத்தில் கொள்ளப்படுவது முக்கியமானது. அத்தோடு வயதாகும் குடித்தொகை ஆனது நாட்டுக்கு ஒரு சுமையல்ல அது அபிவிருத்தியின் ஒரு சாதனையே என்பதை மனதில் கொள்வதும் மிக முக்கியமானதாகும்.

 

 

Views:
445