அதிகரித்து வரும் குடித்தொகை வயதாதல் நமக்கான வாய்ப்பா? சவாலா?

by Shree
24-Sep-2018

முதுமையடைதல் என்பது பெரும்பாலும் சமூகத்தில் காவோலை விழ குருத்தோலை சிரிக்கத்தான் செய்யும். பெரியவர்கள் நம் சமூகத்தின் சொத்து என்ற வாக்கியங்களோடு பெரும்பாலும் கடந்து போய்விடும். முதுமையினால் குறையும் நடமாட்டம், நோய்கள் ஆகிய உடல் ரீதியான மாற்றங்களும் அத்தியாவசிய சேவைகளின் கிடைப்பனவு மற்றும்  மனம் உற்சாகமாக இருந்தும் உடல் அதற்கு ஈடுகொடுக்காமை ஏற்படுத்தும் மன அழுத்தம் தம் பிற்காலம் குறித்த கவலைகள், தனிமை போன்ற மன ரீதியான சவால்கள் என்பன குறிப்பிட்டு நோக்கப்பட வேண்டியன. அதிலும் இலங்கை போன்ற தங்கிவாழ்வோர் உழைக்கும் குடித்தொகையை விட வேகமாக அதிகரித்து வரும் ஒரு நாட்டில் இந்த குடித்தொகை வயதாதல் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமொன்றாகும்.

குடித்தொகை வயதாதல் எப்படி நிகழ்கிறது?

ஒரு நாட்டில் சுகாதார வசதிகளின் முன்னேற்றம் காரணமாக கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிசுக்களின் இறப்பு வீதம் குறைதல், தனி மனித ஆயுட்காலம் அதிகரித்தல், கல்வியறிவு முன்னேற்றம் மற்றும் குடும்பத் திட்டமிடல் சேவைகளின் கிடைப்பனவு அதிகரிப்பு ஆகியனவற்றின் காரணமாக அந்நாட்டின் குடித்தொகையில் வயதானோரின் எண்ணிக்கை உழைக்கும் குடித்தொகையை விட அதிகரிக்க ஆரம்பித்தலே குடித்தொகை வயதாதல் ஆகும். இதை ஒரு வகையில் அபிவிருத்தியின் பக்க விளைவு என்றும் கூறலாம்.

உழைக்கும் குடித்தொகையை விட தங்கி வாழ்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சரியாக தயார்படுத்தல்களில் ஈடுபடாவிடில் பொருளாதார ரீதியான சவால்கள் மட்டும் அல்ல உளவியல் ரீதியான சவால்களையும் நாடு எதிர்கொள்ள வேண்டி நேரிடும். வயதானவர்களுக்கு பொருளாதார ரீதியில் ஒரு பாதுகாப்பான பிற்காலத்தை உறுதி செய்வது எவ்வளவு முக்கியமோ, உள ரீதியிலும் மகிழ்ச்சிகரமான ஒரு வாழ்வை அவர்கள் முன்னெடுத்து செல்லும் வகையில் ஒட்டு மொத்த சமுதாயமும் வலுப்படுத்தப்பட வேண்டியதும், வயதானோரை நாட்டின் அபிவிருத்திக்கு வினைத்திறனாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியதும் மிக அவசியமாகும்.

உலகளாவிய ரீதியில் மொத்த சனத்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் கடந்த இருபது வருடங்களில் 56% ஆக அதிகரித்திருக்கிறார்கள்.

 

 

இலங்கையில் வயதாகும் குடித்தொகையின் பரம்பலும் குடித்தொகைப்பரம்பலை போலவே இடத்துக்கிடம் மாறுபடுகிறது. நாட்டின் 31 சதவீதமான வயதாகும் குடித்தொகை மேல் மாகாணத்திலேயே இருப்பதாக மேலுள்ள வரைபடம் காட்டுகின்றது. 

வயதான குடித்தொகையின் தேவைகளும் அவ்வாறே பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுகின்றன. நாட்டின் அபிவிருத்திக்கு வயதானோரை வினைத்திறனாக பயன்படுத்திக்கொள்ள இது குறித்து சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அந்த ஆதாரம் சார் தரவுகளின் அடிப்படையில் நாட்டில் கொள்கைகள் வகுக்கப்படவேண்டும். பாடசாலை காலம் தொட்டு தங்கிவாழ்வோரை ஒன்றிணைத்து பயணிக்கும் மனோபாயம் பாடத்திட்டங்கள் மூலம் சமூகத்தில் வளர்க்கப்பட வேண்டும்.

அவர்களின் அனுபவம், நிபுணத்துவம் ஆகியன நாட்டின் அபிவிருத்திக்கு வினைத்திறனாக பயன்படுத்தப்படுவதுடன் பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக , உடலியல் ரீதியாக அவர்கள் நிம்மதியாக, ஆரோக்கியமாக, நிறைவாக வயதாதல் செயன்முறைக்குள் உட்செல்ல வேண்டுமானால் அரசாங்கம், சமூகம், குடும்பம், தனிநபர்கள் ஆகிய அனைத்து சமூக கட்டமைப்புக்களினதும் மற்றும் சகல பங்குதாரர்களினதும் பங்களிப்பு அவசியமாகும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக உள்ள இலங்கையின் முன் சவாலாக இருக்கும் இக் குடித்தொகை வயதாதல் நமக்கான வாய்ப்பாக மாறும்.

Views:
1575