தடையென இனியொன்றில்லை!

by Shree
24-May-2018

திங்கட்கிழமை உலகளாவிய ரீதியில் மாதவிடாய் சுகாதார நாள் என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆம், அதுதான் கடைகளில் சானிட்டரி நாப்கின் விற்கிறார்களே, இதற்கெல்லாம் ஒரு நாளா என்று பலர் கேட்கலாம். அந்த மூன்று நாட்கள் என்று ரகசியமாய் சொல்வதும், இன்னமும் சூப்பர் மார்க்கெட்களில் சானிட்டரி நாப்கின் வாங்கினால் அக்கம் பக்கம் பார்த்து எடுத்து வருவதும் என் சமூகத்தில் இன்னும் இருக்கிறதே!

பசிக்கிறது சாப்பிடுகிறோம், காலையில் காலைகடன்களை மேற்கொள்கிறோம், மனிதனாய் பிறந்த அனைவர்க்கும் இது சகஜம். அந்த உடலியல் தேவைகளை சகஜமாக எடுத்துக்கொள்ளும் நாம் அதே போன்ற சர்வசாதாரணமான பெண்களின் உடலியல் சம்பந்தப்பட்ட மாதவிடாயை ஏன் ரகசியமாகவும், சமயங்களில் அருவருப்பாகவும், அதை பேசத்தகாத விடயமாகவும் ஒதுக்கி வைக்க வேண்டும்? எத்தனை ஆண்களுக்கு அதை சகஜமாக எடுத்துக்கொள்ள முடிகிறது? நம்மில் எத்தனை ஆண்கள் வீட்டுப்பெண்களுக்கு கூச்சப்படாமல் சானிட்டரி நாப்கின் வாங்கியிருக்கிறோம்?

இலங்கையில் 50% ஆன இளைஞர்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் குறித்த தெளிவின்றி இருக்கிறார்கள், குறிப்பாக மாதவிடாய் குறித்த விழிப்புணர்வின்றி அதை பேசகூடாத விடயமாக இன்னமும் புதைத்து வைத்துக்கொள்வது நாட்டின் அபிவிருத்திக்கு  வழி கோலப்போவதில்லை.

சமீபத்தில் வெளியான தெற்காசிய பாடசாலைகளில் மாதவிடாய் சுகாதார முகாமைத்துவம் எனும் வெளியீட்டில் வெளியாகியிருக்கும் சமீபத்தில் குறிப்பிட்ட பாடசாலைகளில் UNICEF நடாத்திய ஆய்வில் வெளிவந்த இலங்கை குறித்த புள்ளிவிபரங்கள் சிந்திக்க வேண்டியவை

  • சில பாடசாலைகளே மாதவிடாய்ச் சுகாதாரத்துக்கு போதுமான வசதிகளை கொண்டுள்ளன
  • அரச பாடசாலைகளில் 1% ஆன அதிபர்களே மாணவிகளின் அவசர தேவைக்காக  சானிட்டரி பாட் பெறும் வசதி இருப்பதாக தெரிவித்தனர்
  • 80% ஆன ஆசிரியர்கள் மாதவிடைக்காலத்தில் முழுகக்கூடாது என எண்ணுகின்றனர்
  • 37% ஆன மாணவிகள் ஒவ்வொருமாதமும் மாதவிடாய் சமயத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ பாடசாலைக்கு வராதிருக்கின்றனர்
  • 60% ஆன பெற்றோர் மாதவிடைக்காலத்தில் தம் பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை

 

மாதவிடாய் காலங்களில் சுகாதாரத்தை பேணுவது மிகவும் முக்கியமானதாகும். பாடசாலைகளிலும் வேலைத்தளங்களிலும் மாணவிகள் மற்றும் பெண்களுக்காக மாதவிடாய் சுகாதாரத்தை பேணும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். பாடசாலையில் இனப்பெருக்க சுகாதாரக்கல்வி ஆண் பெண் இருவருக்கும் கற்பிக்கப்படும் போது இரு பாலாருமே அவ்விடயத்தை நேராக அணுகுதல் சாத்தியமாகும். மாதவிடாய்காலங்களில் சிலருக்கு தாங்கமுடியாத வயிற்று வலி போன்ற உபாதைகள் இருக்கும். அப்படியான சமயங்களில் ஓய்வெடுக்கும் வசதிகள் பாடசாலைகளிலும் வேலைத்தளங்களிலும் அமைக்கப்படாவிட்டால் மாதவிடாய் காலத்தில் பாடசாலை மற்றும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தங்கும் பெண்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாது.

மானிடப்பெண்ணின் வெகு சாதாரணமான உடலியல் நிகழ்வு குறித்த புரிந்துணர்வு ஆண் பெண் இருவருக்கும் ஏற்படுத்தபடுதல் முக்கியமானது. மாதவிடாய் பெண்கள் மட்டுமே தமக்குள் ரகசியமாக அணுகும் விடயம் அல்ல. ஆண்களுக்கும் அது தொடர்பிலான முழுமையான புரிந்துணர்வு அவசியம். அப்படியாயின் மட்டுமே வீணான கேலி கிண்டல்கள் தவிர்க்கப்படுதல், பெண்களை புரிந்து கொண்டு அவர்களை இணைத்துக்கொண்டு செயற்படுதல் ஆகியன ஆண்களால் சாத்தியப்படும்.   

இலங்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பிக்கும் இந்நிலையில் பெண்களின் ஆற்றலை உச்சமாக பயன்படுத்திக்கொள்ளுதல் நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதாகும். மாதவிடாய் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளுக்குள் சிக்கி பின் தள்ளப்படும் பெண்களை வலுப்படுத்தி அவர்களின் முழுமையான உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்வது அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூகத்தின் கடமையாகும்.

 

Views:
1108