இளைஞர்களுக்காக இளைஞர்களின் குரல்

by Shree
07-Dec-2017

இளைஞர்களின் பிரச்சனைகளை இளைஞர்களே தீர்க்கும் தளமான Youth4Youth இன் முதலாவது வடமாகாண ஒன்றுகூடலில் தான் கயனி என்று அழைக்கப்படும் கஜேந்தினி யோகேஸ்வரனை சந்திக்க முடிந்தது.

 

 

வடமாகாண இளைஞர்களின் வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகிய இரண்டு பிரதான பிரச்சனைகளை அலசிய அந்த நான்கு நாள் ஒன்றுகூடலில் தன்னுடைய சமூகம் சார்பில் கலந்து கொண்டிருந்தார் கஜேந்தினி. ஒரு சமூகமாக இளைஞர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்வதில் இளைஞர்களின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று ஆணித்தரமாக நம்பும் கஜேந்தினிக்கு வயது 19 மட்டுமே.

வட்டக்கச்சியை சொந்த இடமாக கொண்ட கஜேந்தினி வவுனியாவில் பிறந்திருந்தார். தந்தையை இழந்த அவரை CST பண்ணையில் வேலை பார்த்தபடி அவரது தாயார் தான் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். துரதிஷ்ட வசமாக சாதாரண தரத்தில் போதுமான புள்ளிகள் பெறாத காரணத்தால் கயனிக்கு உயர்தரம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பின்னர் அவர் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டல் அவர் சார்ந்த சமூகத்தில் இருந்து அவருக்கு கிடைக்கவில்லை.

“சாதாரண தரத்தின் பின் நான் என்ன செய்யப்போகிறேன். எனது எதிர்காலம் என்ன ஆகும் என்ற பயம் எனக்கு இருந்தது.”  கயனி

நாட்டின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையை தான் கயனியும் கடந்து வந்திருக்கிறார். A/L  இல்லையென்றால் வாழ்க்கையில் முன்னேறிச்செல்வதற்கு எந்த வழிகளும் கிடையாது. நல்ல வேலை கிடைக்காது போன்ற சமூகத்தில் பொதுவாக நிலவும் கருத்தியல்களால் பல இளைஞர்கள் தங்கள் திறமைக்கு குறைவான வேலைகளை தெரிந்து கொண்டு தங்கள் திறன்களை வீணடிக்கும் அவலம் நாட்டின் ஒரு சாபக்கேடே.

தேசிய தொழிற்பயிற்சி தகைமை தரம் 3 (NVQ-3) ஆனது சாதாரண தரத்துக்கு சமமானதெனவும், தேசிய தொழிற்பயிற்சி தகைமை தரம் 4 (NVQ-4) ஆனது உயர்தரத்துக்கு சமமானது எனவும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வெளியீடு தெரிவிக்கிறது. http://www.ugc.ac.lk/attachments/1156_SLQF.pdf

உயர்தரம் கற்க முடியவில்லை என முடங்கிப்போகாமல் தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாக இந்தத்தடங்கலை கடந்து செல்ல முடியும் என்ற விழிப்புணர்வு எத்தனை இளைஞர்களுக்கு இருக்கிறது? இது தொடர்பான வழிகாட்டலை எத்தனை பேரால் பெற்றுக்கொள்ள முடிகிறது?

கயனியின் விடயத்தில் அவர் தனக்கான பாதையை தெரிந்து கொண்டிருக்கிறார். எந்த வேலையாக இருப்பினும் தனக்கு குழந்தைகளோடு இணைந்து செயற்படுவது மனநிறைவைத்தரும் என்பதால் தன்னுடைய எதிர்காலத்தையும் அப்படியே வடிவமைத்துக்கொள்ள அவர் முடிவு செய்திருக்கிறார். கிளிநொச்சி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் குழந்தைகள் பராமரிப்பு கற்கைநெறியை தற்போது படித்துக்கொண்டிருக்கிறார் கயனி.

அவருண்டு அவர் கல்வியுண்டு என்று இருந்த கயனிக்கு சமூகத்தின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது நாடுகள் தொண்டர்கள் அமைப்பின் 2250 பிரகடனம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ள அவருக்குக் கிடைத்த வாய்ப்பே ஆகும்.

என்னைப்போன்ற இளைஞர்களுக்கு என்னால் ஏதும் உத்வேகத்தையோ வழிகாட்டலையோ கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை நான் நிச்சயமாக செய்வேன் என்று உறுதியாக சொன்ன கயனி YOUTH4YOUTH தளத்தின் கிளிநொச்சி பிரதிநிதிகள் இருவரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெறுமனே பல்கலைக்கழக மாணவர்கள், வலையமைப்புக்களோடு இணைந்திருக்கும் வழக்கமான இளைஞர்கள் தவிர சமூகத்தின் சகல நிலைகளிலும் இருந்து கயனி போன்ற இளைஞர்களின் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமே.   

 

 

 

Views:
858