மொழி: சைகை மொழி ஆசிரியையும் மொழிபெயர்ப்பாளினியுமான துஷாராவுடன் ஒரு உரையாடல்

by Shree
06-Mar-2018

“எனக்கு நடனம் மற்றும் நாடகத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. செவிப்புலனற்றவர்களுக்கான சைகை மொழியையும் நடனத்தின் ஒரு வகை நீட்டிப்பாகவே நான் பார்க்கிறேன். அதை கற்றுக்கொள்ளும் ஆவல் எனக்குள் ஏற்பட்டது இந்தக்காரணத்தினாலேயே.” கிழக்கு மாகாணத்துக்கான Youth4Youth கலந்துரையாடலுக்கு செவிப்புலன் குறைபாடுள்ள மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்கான மொழிபெயர்ப்பாளராக செயற்பட்ட மட்டக்களப்பை செர்ந்த துஷாராவே இவ்வாறு தெரிவித்தார்.

எட்வேர்ட் துஷாரா, மட்டக்களப்பு 

தற்போது 23வயதாகும் துஷாரா காபொத உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று NVQ IT நிலை 4 மற்றும் சைகைமொழியில் டிப்ளோமா ஆகிய கல்வித்தகைமைகளை கொண்டிருப்பவர். செவிப்புலனற்ற பெரும்பாலான பிள்ளைகள் பேச முடியாதவர்கள் ஆகவே முழுக்க முழுக்க அவர்கள் மொழிபெயர்ப்பாளரிலேயே தங்கியிருந்தார்கள். இளைஞர் பயிற்சிப்பட்டறை வதிவிட நிகழ்வாக முழுவீச்சில் நடந்துகொண்டிருந்த போது நடப்பவைகளை மொழிபெயர்த்தது மாத்திரமல்லாமல் இறுதி நாள்வரை உற்சாகமாக அம்மாணவர்களையும் மற்றைய இளைஞர்களோடு இணைந்து நிகழ்வுகளில் பங்களிக்க வைத்த இரண்டு மொழிபெயர்ப்பாளர்களையும் சற்றே ஆச்சரியமாக தான் அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒட்டுமொத்தமாக சகலத்திற்கும் தங்களிலேயே அம்மாணவர்கள் தங்கியிருக்கும் போது ஒரு நாளில் கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேர நிகழ்வில் சலிக்காமல் அவர்களோடு பணியாற்றும் பொறுமை அனைவருக்கும் வாய்க்காது.

மற்ற இளைஞர்களோடு இணைந்து செவிப்புலனற்ற மாணவர்கள் குழு நாடகமொன்றில் கலந்து கொண்ட போது

“எனக்கு அவர்களோடு பணி செய்வது பிடிக்கும். மொழிபெயர்ப்பாளராகவும் ஆசிரியையாகவும் பணியை தொடங்கியுள்ள நான் என்னுடைய எதிர்காலத்தையும் இந்தத்துறையிலேயே தொடர்ந்து கொண்டு செல்ல முடிவு செய்துள்ளேன்” என்கிறார் துஷாரா.

அவருடைய பணி குறித்து சமுதாயம், உறவினர்களின் பார்வை எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு “ஒரு சைகைமொழி ஆசிரியராக இருப்பதனால் சமூகத்தில் நான் செல்லுமிடங்களில் நன்மரியாதை கிடைப்பதை நான் உணர்ந்துள்ளேன். ஆனால் என்னதான் எனக்கு இந்தத்துறை பிடித்திருந்தாலும் என் உறவினர்களுக்கு நான் இந்தத்துறையில் இருப்பது அவ்வளவு திருப்தியாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். என்னுடைய பாதுகாப்பு மற்றும் என்னுடைய எதிர்காலம் குறித்து அவர்களுக்கு லேசான கவலையுண்டு.” என்று கூறி புன்னகைத்தார்.

நிகழ்வில் செவிப்புலனற்ற மாணவிகளின் அழகிய நடனம் 

துஷாராவுக்கு இந்தப்பணியில் சவால்கள் நிறையவே உண்டு. சில சொற்களுக்கு சைகை மொழியே கிடையாது. அதுவும் இளைஞர் கருத்தரங்குகள் போன்ற இடங்களில் ஆழமான துறை சார் சொற்களை பேசுபவர்கள் பயன்படுத்தும் போது சைகைமொழியின்மை காரணமாக அதை மாணவர்களுக்கு புரியவைப்பது அவருக்கு பெரும் சிரமமாக இருக்கிறது. அநேகமான செவிப்புலனற்ற மாணவர்கள் நீண்டகாலம் பாடசாலையில் படிப்பதுண்டு. ஏன் இங்கு அவர் அழைத்து வந்த மாணவர்களிலேயே துஷாராவை விட வயதானவர்கள் உண்டு. அவர்களை சில சமயங்களில் கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிரமமாக இருப்பதும் உண்டு. சில மாணவர்கள் உதட்டசைவை புரிந்து கொள்வார்கள், ஆனால் எல்லாராலும் அது முடியாது.

தனது மாணவர்களோடு இணைந்து  சமூக மட்ட செயற்திட்ட உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த போது

இந்த மாணவர்களை மிகச்சிறு வயதிலேயே அடையாளம் கண்டு அவர்களின் நிலையை பெற்றோர் ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சைகள், சிலருக்கு பேச்சுப்பயிற்சி போன்றவற்றை வழங்கி ஓரளவுக்கு அவர்களை வலுப்படுத்தலாம். ஆனால் நிதர்சனத்தில் சில பெற்றோர் மாற்றுத்திறனாளிக்குழந்தைகள் குறித்து வெட்கப்பட்டு அவர்களை வெளியுலகிற்கு அதிகம் காண்பிக்காமல் வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்த்தல், அவர்கள் மேல் கொண்டுள்ள அதிக அன்பு காரணமாக பாடசாலை விடுதிகளுக்கு அனுப்பப்பயந்து கற்பிக்காமல் வீட்டிலேயே அவர்களின் பாதுகாப்பிலேயே வைத்துக்கொள்ளல் போன்ற பிரச்சனைகள் காரணமாக சுயமாக இயங்குவதற்குரிய தகைமைகளை இப்பிள்ளைகள் வளர்த்துக்கொள்ள முடியாமல் போகின்றது.

“அனைவரையும் ஒன்றாக இணைத்து நடாத்தும் இவ்வகை பயிற்சிப்பட்டறைகள் செவிப்புலனற்ற மாணவர்களை மட்டுமல்ல, அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களையும் சந்தோஷமாக இணைந்து தங்களது முழுமையான ஆற்றலை வளர்த்துக்கொள்ள உதவி புரிகிறது. ஆகவே அரசாங்கமும், தொண்டர் நிறுவங்களும் இளைஞர்களை வலுப்படுத்தும் செயற்றிட்டங்களை மேற்கொள்ளும் போது இதை கவனத்தில் எடுத்து செயற்படுவது சமுதாயத்துக்கு நன்மை பயக்கும்”

 

 

Views:
323