முதிரா வித்துக்கள்- அராலி கிழக்கில் அதிகரித்து வரும் பாடசாலை இடைவிலகல் குறித்த குறும்படம்

by Shree
11-Jan-2018

போர் மற்றும் 25 வருடங்களாக இருந்த பதட்டநிலை காரணமாக பெரும்பாலும் நாம் மறந்தே போய்விட்ட ஈழத்தமிழ் சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்று முயற்சிக்கும் இளைஞர்கள் பலரை இப்போது பரவலாக பார்க்க முடிகிறது. சரியான வழிகாட்டல்களோ, முதலீடோ, உரிய கல்வியோ இல்லாமலே சுயம்புக்களாய் பல இளைஞர்கள் குறும்படங்கள், இசைத்தட்டுக்கள், முழுநீளத்திரைப்படம் என முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. விமல்ராஜ் கூட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அப்படிப்பட்ட கலைஞரே. வெறுமனே பொழுதுபோக்குக்காக அல்லாமல் சமூகப்பிரச்சனைகளை தன் படைப்புக்கள் மூலமாக மக்களிடம் எடுத்துச்சென்று சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நானும் ஒரு கருவியாக வேண்டும் என்பது விமலின் அவா.

ivoice ஆலோசனைப்போட்டியில் பாடசாலை விட்டு யாழ்ப்பாணம் அராலி கிழக்கு பிரதேசத்தில் பரவலாக காணப்படும் பாடசாலையை விட்டு இடைவிலகும் சிறுவர்களின் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு வீடியோ தயாரிப்பு முன்மொழிவும் முதற்பத்து இடங்களை பிடித்து பரிசுத்தொகை ஒரு லட்சத்தை வென்றிருந்தது.

விமல்ராஜ் 

விமலின் முதற்கட்ட நடவடிக்கையானது குறித்த பிரதேசத்தில் ஏன் பாடசாலையை விட்டு இடைவிலகும் பிரச்சனை காணப்படுகிறது என்று ஒரு சிறு ஆய்வொன்றின் மூலம் ஆராய்ந்து உரிய பங்காளர்களின் உதவியுடன் அதற்கான விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை தயாரித்தலாகும். விமல்ராஜின் ஆய்வுக்கு அராலி கிழக்கி சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர்மக்கள், கிராம அதிகாரி என பலரும் உதவியிருக்கிறார்கள். அதன்படி உரிய வயதுக்கு முன்னரே திருமணம் செய்தல், பெற்றோர் வேலைக்கு சென்றுவிடுவதால் சகோதரர்களை பார்த்துக்கொள்ளவும் வீட்டு வேலைக்காகவும் வீட்டில் நிறுத்தப்படுதல், வறுமை, வரவுக்குறைவு போன்ற காரணங்களாலேயே பாடசாலை விட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்கிறார் விமல்ராஜ்.

பாடசாலையை விட்டு இடைவிலகுவதால் கல்வி பாதிக்கப்படுகிறது. உரிய கல்வி இல்லாமையால் சரியான வேலைவாய்ப்பு அமைவதில்லை. அதனால் இளவயதுத் திருமணம் வறுமை பல்வேறான ஆரோக்கியமற்ற விளைவுகளோடு என வறுமையின் விஷச்சக்கரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனை உடைக்க கல்வி என்ற ஒரு கருவியால் மட்டுமே முடியும்.

ஆய்வில் தெரியவந்த ஒரு சிறுமியின் கதையே சற்றே குறும்பட வடிவுக்கு மாற்றி இந்த 'முதிரா வித்துக்கள்' குறும்பத்தை தயாரித்திருக்கிறார் அவர். அதன் பின் அப்பிரதேச பாடசாலைகளில் அதை திரையிட்டும் இருக்கிறார். நேர்த்தியான திரைக்கதை, நாடகத்தனமில்லாத நடிகர்களின் நடிப்பு மற்றும் தரமான ஒளிப்பதிவு என தொழிநுட்ப ரீதியாகவும் பலரின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது அக்குறுந் திரைப்படம்.

திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி

"இந்த குறும்படத்துக்கு இவ்வளவு வரவேற்பிருக்கும் என்று என்னாலேயே நம்ப முடியவில்லை. பலர் என்னை பாராட்டினார்கள். பலர் உதவி செய்ய முன்வந்தார்கள். வெகு சமீபத்தில் அராலியை சேர்ந்த தற்போது லண்டனில் வசித்துக்கொண்டிருக்கும் ஒருவர் அப்பிரதேச மாணவர்களுக்கான டியூஷன் வசதிகளை வழங்க முன்வந்தார். என்னுடைய சிறிய முயற்சியால் ஒரு சிலருக்கேனும் நன்மை நடக்குமாயின் எனக்கு அதுவே பெரும் மனத்திருப்தி" என்று புன்னகைக்கிறார் விமல்.

முதிரா வித்துக்கள் குறும்படத்தை இங்கு பார்வையிடலாம் :

 

Views:
174