மலையக பெண்களில் பெரும்பாலானோரின் தொழில் தேடுதலில் பாரம்பரியத்தின் தாக்கம்.

by admin
26-Jun-2020

மலையக பெண்கள் என்ற வார்த்தையின் பிரதிபலிப்பை பார்ப்போமேயானால் சுமார் இரு நூற்றாண்டுகள் பின் நோக்கி செல்ல வேண்டும். ஆம் அதாவது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்களில் பரம்பரையின் வழி வந்த இந்திய வம்சவழி பெண்களே. இம்மலையக பெண்கள், இவர்கள் கள்ளம் கபடம் அற்ற வெள்ளை உள்ளம் கொண்ட பெண்மணிகள். இலங்கை வரலாற்றில்
தஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்று அடையாளமிட்டு காட்டப்படும் இம்மக்களின் தஞ்சம் இன்னும் நிலை நிறுத்தப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.

உதாரணமாக
01. தேயிலை தொழிலில் ஏற்றுமதியின் மூலம் இலங்கை பெறும் வருமானம்.
02. பணிப் பெண்களாகவும் இப்பெண்களில் பெரும்பான்மையானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வதன் மூலமும் இலங்கை நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்தை குறிப்பிடலாம்.

மலையக பெண்களில் பெரும்பாலான பெண்கள் பாரம்பரிய கலாச்சாரத்தில் பின்னி பிணைந்தவர்களாக விளங்குகின்றனர். அவர்களின் தொழில் தேடுதலில் கலாச்சாரம் செல்வாக்கு பெற்று விளங்குகின்றது. ஓரளவு கல்வி அறிவு பெற்றவர்களுக்கு உகந்த தொழிலாக இச்சமூகத்தவர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தொழிலாகவும் ஆசிரியர் தொழில் விளங்குகின்றது. இல்லாவிட்டால் அரசாங்க தொழிலே சிறந்தது என்ற எண்ணக்கருவில் காணப்படுகின்றனர். ஏனைய தொழில் தேடுதல் பற்றி அறியாத சமூகமாக காணப்பட்ட போதிலும் தமது அன்றாட தேவைகளாகிய உணவு உடை உறையுள் மூன்றையும் பெற்றுக் கொண்டால் போதும் என்ற திருப்தியில் வாழும் பெண்களாக விளங்குகின்றனர். ஏனைய அறிவு சார்ந்த விடயங்கள் தொழில்கள் பற்றி அறிந்திருந்தப் போதிலும் அதனை சமூகத்தவர் எவ்வாறு பார்வையிடுவர் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? கணவர் உட்பட அவரின் குடும்பத்தவர்கள் என்ன கூறுவார்களோ அவர்கள் தன் செயற்பாடுகளை ஏற்றுக் கொள்வார்களோ? விரும்புவார்களோ? என்ற அச்சத்தில் தம்மை தாமாமே விலங்கிட்டுக் கொண்டு வாழும் பெண்களாகவே இப் பெண்கள் வாழுகின்றனர்.

இப் பெண்கள் பாரம்பரிய கலாச்சாரத்தின் உண்மை தன்மையை அறியாது சிந்திக்காது தவறான எண்ணக்கருக்களை வளர்த்து கொண்டு தம்மை தாமே கட்டுப்பாட்டுடன் முடக்கி கொண்டு வாழும் சூழலில் இருப்பதை அவர்களுடன் அன்றாடம் சேவையாற்றுவதில் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இப்பெண்கள் சமய விழுமியங்களில் கூடுதலான பற்றுக் கொண்ட பெண்களாக இருக்கின்றார்கள். சமயங்கள் பெண்களை மட்டம் தட்டுவதாகவும் ஆண்களுக்கு கீழ் பெண்கள் என்ற எண்ணோட்டத்தில் இயங்குகின்றனர். உதாரணமாக ஆதி இதுவென்று அளவிட முடியாத இந்து சமயம் ஆண் பெண் சமத்துவத்தையே நிலை நாட்டி நிற்கின்றது. (அர்த்தநாரீஸ்வரர்) ஆனால் நடை முறையில் ஆண்களுக்கு கீற் பட்டவர்களே பெண்கள் என போதிக்கப்படுகின்றது. அவ் வழக்கினையே இவர்களும் பின்பற்றுகின்றனர்.

இவர்களுடனான கலந்துரையாடலின் போதும் ஏனைய செயற்பாடுகளின் போதும் ஆண் தலைமைத்துவம் மேலோங்கி இருப்பதையும் இதனை இப்பெண்கள் தங்கள் தலையாய கடமையாக நினைத்து ஆதரிப்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இப்பிரச்சினையானது. அனைத்து இடங்களிலும் காணப்பட்டாலும் மலையக மக்களிலும் தோட்டப்புறத்தில் கூடுதலாக காணப்படுகின்றது எனலாம். எடுத்துக்காட்டாக இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தின் ஹெவாஹெட்ட பிரதேசங்களுக்கு உரித்தான ஹெவாஹெட்ட, முல்லோயா, ஹோப் கிராமங்களை எடுத்துக் கொண்டால். அண்ணளவாக 4000ம் பெண்கள் வாழ்கின்றனர் அதில் 850 பெண்கள் தோட்ட முகாமைத்துவத்தில் சேவையாற்றுகின்றனர். 30 பேர் வெளி நாடுகளிலும், 75 பேர் நகர் புறங்களிலும் 1500க்கு மேற்பட்ட பெண்கள் வீடுகளிலும் இருக்கின்றனர். இப்பெண்கள் சுயாதீனமாக செயற்படும் ஆற்றலானது குறைவாகவே காணப்படுகின்றது எனலாம்.

அப்பிணக்கானது. தற்போதும் அப்பிரதேசங்களில் காணப்படுகின்றது. இதனை ஆதார பூர்வமாக கூறுவதாயின். 2010 ஆம் ஆண்டுகளில் ரூம் டு ரீட் நிறுவனத்தினால் மேற்கொண்ட ஆய்வுகளில் பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் குறைவாக காணப்படும் பிரதேசங்களில் இதுவும் ஒன்றாக காணப்பட்டது. அதனை அடுத்த தலைமுறையினரிடமாவது தொடராதிருக்க பெண்களின் கல்வி தரத்தை மேம்படுத்த 'பெண்களுக்கான கல்வியை ஊக்குவிக்கும் முகமாக ரூம் டு ரீட் நிறுனத்தின் பெண் பிள்ளைகளில் கல்வி தரத்தை மேம்படுத்தும் செயற்றிட்டமானது 2011 – 2019 வரை' அப்பிரதேசங்களில் இயங்கி வந்தது.

அச்செயற்றிட்டத்தில் வாழ்க்கையை வெற்றிகரமாக இயக்குவதற்கு தேவையான திறனை விருத்தி செய்வதற்கான அதாவது சுய திறனை விருத்தி செய்யும் வாழ்க்கை தேர்ச்சி பயிற்சிகள் பல பெண்பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் அவை நடைமுறையில் வாழ்க்கையில் எந்தளவு சாத்தியமானது என்றால் கேள்விக் குறியாகவே காணப்படகின்றது எனலாம். ஏன் என்றால் பாடசாலை நாட்களில் அவ் பயிற்சிகளை பெற்று சிறந்து விளங்கிய அவ்மாணவர்கள். இன்று இளவயதில் திருமணம் புரிந்து பிள்ளைகளை பெற்ற தாய்மார்களாக காணப்படுகின்றனர். அது அப்பெண்களின் சுய விடயமாக காணப்பட்டப் போதும். இளவயது திருமணத்தினால் ஏற்படும் இன்னல்களை சந்திப்பதோடு சமூதாயத்தை எதிர்கொள்ளும் ஆற்றலின்மையால் பொருளாதார நெருக்கடியில் செய்வதறியாது தவிக்கின்றனர். அவர்களில் இந்நிலையினை பொருளாதாரம் ஈட்டும் வியாபார நோக்கத்தை கொண்ட நிதி நிறுவனங்கள் சுய கடன் தேவை திட்டங்களை மக்கள் முன் கொண்டு சேர்த்து அவர்களை சங்கடத்துக்குள்ளாகுகின்றன.

https://www.ivoice.lk/images/stories/www1.JPG

இப்பெண்களின் எண்ணங்கள் நோக்கங்கள் செயல்கள் குறுகிய வட்டத்துக்குள்ளே நின்று விடுகின்றன. அவ்வட்டத்தை தாண்டி சில பெண்கள் வெளியில் வந்தாலும் சமூகத்தில் பல தேவையற்ற விமர்சனங்களை சந்திக்கின்றனர் அவற்றுக்கு அச்சம் கொள்ளும் பெண்களாகவும். தன் பலம் என்ன என்பதில் ஆர்வம் அற்றவர்களாகவும் திகழ்கின்றனர்.

தாய்மை என்ற உன்னத தன்மையை அடைந்ததும் தமது விருப்பு வெறுப்புக்களில் ஆர்வம் அற்றவர்களாகவும் திகழ்கின்றனர். இதுவே இவர்களில் பாரம்பரிய கலாச்சாரமாக காணப்படுகின்ற பட்சத்தில் அதனை பின் தொடர்வதே வழக்கமாக கொண்டுள்ளனர். மற்றவரின் சந்தோசத்தில் தம் இன்பம் இருப்பதாக எண்ணி வாழும் இவர்களின் குணத்தை போற்றினாலும் தன் வாழ்க்கையை தான் வாழாது பிறர் வாழ்வதற்கு வழிவகுக்கும் சமுதாய தன்மையை கண்டு மனம் வருந்துகின்றது.

இலங்கை நாட்டின் அபிவிருத்தியானது பெரு வளர்ச்சி கண்ட கொழும்பு போன்ற வளர்ச்சி அடைந்த நகரங்களோடு நின்று விடாமல் மலையக தோட்டபுற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தலிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது அவாவாகும்.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது தோட்ட புற மக்களின் வாழ்வியல் தன்மையானது அனைவர் பார்வையிலும் சித்தரிக்கும் ஓன்றாகவும் அது தொடர்பான ஆக்கங்களும் கட்டுரைகளும் விமர்சனங்களும் எழும் ஒர் விடயமாக காணப்படுகின்றதே ஒழிய, அவர்கள் வாழ்வியல் தன ;மையை மேம்படுத்தும் ஒன்றாக விளங்குவதில்லை. அம்மாற்றத்தை எதிர்பார்த்து வித்திட்ட பலரில் நானும் ஒருவராக நின்று இவ்வாக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் - அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு!

 

Views:
442