புதை(கை)ந்து கிடக்கும் கொழும்பு தொடர்மாடிக்குடியாளர்கள் எதிர்கொள்ளும் அவலம்!

by admin
29-Jun-2020

நிமிடத்துக்கு நிமிடம் பதற்றத்துடனும், அவசர கதியிலும் ஓடிக்கொண்டிருக்கின்றது “கொழும்பு” மாநகரம். இலங்கை திருநாட்டின் தலைநகரம் என்று புகழாரம் பேசப்படும் இதே கொழும்பு மாநகரில்தான் பல்வேறு அவலங்களும் அறியப்படாமல் மூழ்கிக் கிடக்கின்றன.

நேற்றைய மழைக்கு முளைத்த காளான்கள் போல ஆயிரமாயிரம் தொடர்மாடி வீட்டு குடியிருப்புக்கள் இன்று கொழும்பில் அவசரமாக முளைத்திருக்கின்றன. மாநகரம் அதன் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளுக்குள் என்னை இழுத்துச் சென்றது. ஒரே அத்திவாரத்தின் மேல் எழுந்த தீப்பெட்டி போன்ற குச்சி வீடுகளைக்கொண்ட தொடர்மாடி கட்டிடம், இங்கு பல அவலங்கள் பேசப்படாமல் புதைந்து கிடக்கின்றன.

கொழும்பு, தெமட்டகொட "மிஹிந்து சென்புர" தொடர்மாடிக் குடியிருப்பின் "B-5 Block" இல் இருந்து அவை குரல்களாக இங்கு வெளிவருகின்றன.

“கொம்பனித் தெரு (Slave Island) பகுதியில் வசித்துவந்த நாம், கொழும்பின் அபிவிருத்திப் பணிகளுக்காக எனக் கூறி தெமட்டகொடையில் உள்ள இந்த தொடர்மாடி வீட்டிற்கு நகர்த்தப்பட்டோம். 5 வருடத்தில் எமக்கு வீட்டு உறுதிப்பத்திரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. தற்போது 10 வருடங்கள் கடந்துவிட்டன. இதுவரை எதுவும் இல்லை. எமக்கு நீர் கட்டணம் மிகையாக வருகின்றது. அதை குறைக்கிறார்களே இல்லை. எமது தொடர்மாடிக் குடியிருப்புக்கான நீர் வழங்கல், விநியோகம் என்பன நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு மாற்றப்பட வேண்டும். இந்த குடியிருப்பில் மேல் மாடிகளில் வசிப்போர் எது பற்றியும் சிந்திக்காமல் குப்பைகளை மேலிருந்து கீழ் நோக்கி வீசுகின்றார்கள், எச்சிலை கண்டபடி துப்புகின்றார்கள். ஆகக் கீழ் மாடியில் வசிக்கும் நாம் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றோம். குப்பைகளை எந்தவித ஒழுங்குமின்றி வீசிக் குவிக்கின்றார்கள். கொசுக்கள் குப்பைகளை மொய்க்கின்றன. இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றோம். எந்த ஒரு அரசியல்வாதியோ, அரசியல் கட்சியோ நாம் இருக்கின்றோமா? இறந்துவிட்டோமா? என்பதைக் கூட பார்க்க வருவதில்லை. இதுவா அபிவிருத்தி?” – ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவரான குடியிருப்பாளர் M.S. வீரமுத்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு வசிக்கும் பெரோஸா கமால்தீன் கருத்து தெரிவிக்கையில், “எமக்கு மாபெரும் அநீதி இழைக்கப்படுகின்றது. முறையான வடிகாலற்ற பிரச்சினை இங்கு தொடர்கின்றது. குடியிருப்பில் வாழும் மக்கள் தங்கள் வீட்டு கழிவு நீரை, கழிவறை கழிவுகளை எமது வீட்டுக்கு முன்னால் செல்லும் வடிகானுக்கு அனுப்புகின்றார்கள். அது பலபோது நிரம்பி வழிகின்றது. அசுத்தமான நீர் வீட்டின்முன் கசிந்து, தேங்கி நிற்கின்றது. எமது பிள்ளைகளுக்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தொற்றுகின்றன. பராமரிப்பு செலவை எமது கட்டணப் பட்டியலில் மேலதிகமாகச் சேர்த்து எடுத்தாலும், நீர் வழங்கும் மோட்டார் பழுதானால் கூட அதை திருத்தித் தருவதில்லை. எமக்கு வரும் அதிக நீர் கட்டணம் உள்ளிட்ட பட்டியல்களை செலுத்தவே எனது கணவரின் சம்பாத்தியத்தில் பெரும்பகுதி செலவாகின்றது. எமது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரசபைக்கு முறையிட்டாலும், நாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதுபோல பதில் தருகின்றார்கள். ஆரம்பத்தில் எமக்கு காணி இருந்தது. கொழும்பில் 50 வருடங்களாக நாம் வாழ்ந்த வீட்டை அறிவித்தல் தந்து மூன்றே நாளில் உடைத்தார்கள். இப்போது இந்த சிறிய வீட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். எமது பிள்ளைகளை எதிர்காலத்தில் திருமணம் செய்துகொடுத்தால் அவர்களுக்கு வீடொன்றையோ, அறையொன்றையோ கட்டிக்கொடுக்கவும் முடியாத துர்ப்பாக்கியசாலிகள் நாங்கள்.”

அடுத்து, மீன் வியாபாரியான நிஹால் காமினி கருத்து தெரிவிக்கையில்,

“நீர் வழங்கும் 2 மோட்டார்கள் இந்த தொடர்மாடி குடியிருப்புக்காக பொருத்தப்பட்டுள்ளன. அதுவும் சரியாக வேலை செய்வதில்லை. நாம் முன்னர் வாழ்ந்த இடம் இதுபோன்ற அசுத்தமான இடமாக இருந்ததில்லை. இங்கு ஒவ்வொரு வீட்டிலும் சிறு பிள்ளைகள் இருக்கின்றனர். இங்கு நாம் எதிர்கொள்ளும் வடிகால், கழிவு பிரச்சினைகளால் அவர்களை கிருமிகள் தோற்றுகின்றன. இந்த குடியிருப்புக்காக நியமிக்கப்பட்டிருக்கும் உரிய அதிகாரியும் நாம் சொல்வதை கவனத்திலும் எடுப்பதில்லை” என்றார்.

அடுத்து V. ருக்மணி என்ற மூத்த பெண்மணி கருத்து தெரிவிக்கையில்,

“மேல்மாடியில் உள்ள வீட்டின் கழிவுநீர் எமது வீட்டிற்குள் கசிகின்றது. வீட்டின் மேல் கொங்கிரீட் இலிருந்து அது கசிந்து வீட்டிற்குள் விழுகின்றது. எமக்கு வீடு வழங்கப்படும்போது ஆரம்பத்தில் இப்படி இருக்கவில்லை. ஒரு வருடம் கடக்கும்போது இந்த பிரச்சினை ஆரம்பித்தது. இன்று அது தொடர் பிரச்சினையாகவே இருக்கின்றது. இதனால் வீட்டின் மேல் சுவர் கருப்பு நிறமாகவும், ஈரழிப்பாகவும், அலங்கோலமாகவும் காட்சி தருகின்றது. முறையிட்டும் இதற்கு இன்னும் தீரவில்லை. மேல் மாடிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் குப்பைகளை கீழே வீசுகின்றார்கள். துப்பரவு செய்யவோ, குப்பைகளை பெருக்குவதற்கோ யாரும் இல்லை.”

அதிக நீர் கட்டணம், வடிகால் பிரச்சினை, கழிவகற்றல் பிரச்சினை, அசுத்த நீர் கசிவு, சுகாதார சீர்கேடுகள் என இங்கு அவலங்கள் தொடர்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சு ஆகியன இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குடியிருப்பாளர்களின் எதிர்பார்ப்பு.

தமது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக வழங்க சிறு நிலமோ, புதிய வீடொன்றோ, குறைந்தது அறையொன்றோ இல்லாமல், வீட்டை விஸ்தரிக்கவும் முடியாத இவர்களின் நகர வாழ்க்கை, இல்லை.. நரக வாழ்க்கை என்றுமே விடிவில்லாத ஒரு தொடர் கதை. பிரம்மாண்டமான வானத்தின் கீழே அணைக்கப்படாத மின் விளக்குகளுக்குக் கீழ் புள்ளியாய் மறைகிறது இவர்களது வாழ்க்கை.

Views:
482