தென் மாகாணத்தில் Youth4Youth

by Shree
07-May-2018

சமாதானத்தை கட்டியெழுப்பவும் தம் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதில் தலைமையேற்று செயற்பட இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் Youth4Youth தென்மாகாணக்கலந்துரையாடல் நேற்றைய தினம் நிறைவுபெற்றிருந்தது. வடக்கில் ஆரம்பித்த இந்த கலந்துரையாடல் கிழக்குடன் கைகோர்த்து இப்போது தெற்குக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சமாதானத்தை விரும்புபவர்களாய் பிரதேச வேறுபாடுகளின்றி  இளைஞர்கள் கலந்து கொண்டதும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது, குறிப்பாக 30 வருட கால இனப்பிரச்சனையை சுமந்து கொண்டிருந்த இலங்கையில் இவ்வகையான மாற்றங்கள் வரவேற்கப்படவேண்டியன.

சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்ற சொல் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் வெறுமனே அரசியல் தீர்வும், போரில் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு உதவுதல் என்றும் மட்டுமே பலரால் புரிந்து கொள்ளப்படுவது தான் வழக்கமாக இருக்கிறது. அந்த இரண்டை மட்டும் செய்து முடித்தால் நிலையான சமாதானம் கிட்டி விடாது. அந்த முயற்சிகளுக்கு சமாந்தரமாக பெண்கள் மற்றும் இளையவர்களை வலுப்படுத்தல், புரிந்துணர்வினை உருவாக்குதல், நட்புறவை வளர்த்தல் ஆகியன சிறு வயதில் இருந்தே இளைய சமுதாயத்துக்கு ஊட்டப்பட வேண்டும். கடந்த கால கசப்புணர்வையும் வெறுப்பையும் பின்னே விட்டுவிட்டு தங்களையும் தாங்கள் சார் சமூகத்தையும் வலுப்படுத்த இளைஞர் சமுதாயம் முன் வரும்போது அந்நாடு நிச்சயமாக நிலையான சமாதானத்தின் பாதையில் நகரும். 

ஒழுங்கமைப்புக்குழு உறுப்பினராக வடக்கிலிருந்து வந்து கலந்து கொண்ட தாட்ஷாயினி

கிழக்கு மாகாண ஒழுங்கமைப்புக் குழுவை சார்ந்த அபிஷேத்வர்மன்

ஒரு சிறிய நாட்டில் எல்லைகளால் பிரிக்கப்பட்டிருந்தாலும் இளைஞர் சமுதாயம் என்ற குடித்தொகைக்கு பொதுவான பிரச்சனைகள் ஏராளம் உண்டு. அவற்றுக்கு தீர்வு காண பரஸ்பரம் அறிவுப்பகிர்தலும், உதவியும் தமக்குள்ளேயே வளவாளர்களை அடையாளம் கண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் ஒரு இளைஞர் வலையமைப்பை உருவாகும் Youth4Youth இனி மத்திய மாகாணத்துக்கு நகர இருக்கிறது.

வேலைவாய்ப்பு மற்றும் சரியான விழுமியங்களை, மனப்பாங்குகளை வளர்த்துக்கொள்ளுதல் ஆகிய இரு தலைப்புக்களை மையமாக கொண்டே தென் மாகாணக் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இளைய தலைவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தங்களைக்குறித்தும் தாங்கள் ஈடு பட்டிருக்கும் சமூகச் செயற்றிட்டங்கள் குறித்தும் அவர்கள் தென்னிலங்கை இளைஞர்களோடு பகிர்ந்து கொண்டதோடு அந்த பயணத்தில் தாங்கள் எதிர் கொண்ட சவால்களையும் அவர்கள் கலந்துரையாடினர்.

ஐக்கிய நாடுகளின் 2250 தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம், ஐக்கிய நாடுகள் தொண்டர் நிறுவனம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் நிதியத்துடன் இணைந்து இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

 

 

 

Views:
171