டிமென்ஷியா

by Shree
11-Jan-2019

அம்மா எப்போதுமே சமூக விடயங்களில் பங்கெடுத்துக்கொள்வதிலும் தேவாலயத்தின் பெண்கள் குழுக்களுக்கு தலைமையேற்று நடாத்துவதிலும் முன்னின்று செயற்படுவார். பேகிங் செய்வதில் அம்மாவை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. விதவிதமான கேக் வகைகள், பேஸ்ட்ரி வகைகள் என அவர் தயாரிக்காத உணவுகள் குறைவு. எதை உண்டாலும் அது அவருக்கு பிடித்திருந்தால் சமையல்குறிப்பை தேடி தனித்துவமாக அதை தயாரித்து விடுவதில் வல்லவர். நிறைய வாசிப்பார். ஒரு தோழியாக என்னையும் அண்ணாவையும் வழி நடத்தியவர், நான் கல்வியில் சாதித்த அத்தனை விடயங்களுக்கும் அவர் தான் அடிப்படை உந்து சக்தியாக இருந்தார். ஆனால் அவருடைய வாழ்க்கை இப்படி அறுபதோடு முடிந்து விடும் என நானோ அண்ணாவோ கனவிலும் நினைத்ததில்லை.

அவரது ஐம்பதுகளின் இறுதிப்பகுதியில் தான் நாங்கள் கொழும்பில் இருந்த போது தான் அவரது நடத்தையில் சிறிய மாறுபாட்டை நாம் அவதானித்தோம். எப்போதும் எதையும் ஒழுங்கு முறையுடன் நடாத்துபவர், வீட்டில் பொருட்களையும் அதே ஒழுங்கில் தான் பேணுவார். அவர் பொருட்களை வைத்த இடத்தை மறப்பது என்பது எங்களுக்கு விநோதமாக இருந்தது. அடிக்கடி அல்ல ஆனாலும் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை எதையாவது அவர் மறந்து விட்டு தேடுவது நடந்து கொண்டிருந்தது. வயோதிபத்தின் அடையாளம் என்று என்னால் ஒதுக்கமுடியவில்லை. ஐம்பதுகளின் இறுதி ஒன்றும் வயோதிபம் அல்லவே. நான் மருத்துவத்துறையில் இருந்த படியால் உடனடியாக டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறியாக இருக்குமோ என்று சந்தேகித்து வைத்தியரிடம் அழைத்து சென்றோம்.

நாம் சந்தேகப்பட்டது உண்மையே. அவர் டிமென்ஷியாவின் ஆரம்ப நிலையில் இருந்தார். கொழும்பில் அவரை இடம் மாற்றி வைத்திருக்க வேண்டாம் எனவும் அவருக்கு பழக்கமான சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் வைத்திருப்பது அவரது மனநிலைக்கு உதவும் என்றும் அறிவுரை தரப்பட உடனடியாகவே நாம் யாழ்ப்பாணம் சென்று சேர்ந்தோம். அந்த வருடத்தில் இருந்து அவர் முழுமையாக டிமேன்ஷியாவுக்குள் விழ வெகு சில காலமே எடுத்தது. பொருட்களை எடுத்த வைத்ததை மறந்து பின் வாழ்வில் இருந்த மனிதர்களை மறக்க ஆரம்பித்தார். திருமணத்துக்கு முன்னான வாழ்க்கை அவரது அப்பா அம்மாவுடன் இருந்த நாட்கள் குறித்து பேச ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் என்னை பார்த்தால் நான் யார் என்றே அவருக்கு மறந்து போனது. உணவு உண்டதில் இருந்து மருந்துகள் எடுத்துக்கொள்வது சுய சுகாதாரம் சகலமுமே அவர் இன்னொருவரில் தங்கி வாழும் நிலைக்கு வர அதிக காலம் பிடிக்கவில்லை. இப்போது சகலத்திலும் கிட்டத்தட்ட ஒரு மாதக்குழந்தையின் நிலையில் தான் அவர் இருக்கிறார். அவரை முற்றுமுழுதாக கவனித்துக்கொள்வது என் அப்பா தான்.

என்னதான் நாங்கள் யார் என்று மறந்து போனாலும் உணர்வால் நம்மோடு ஒன்றித்தான் இருப்பார் போலிருக்கிறது. நாங்கள் கொஞ்சம் விலகினாலும் பயந்து அழ ஆரம்பித்து விடுவார். காலம் செல்ல செல்ல அவரை கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலை கூட நமக்கு ஏற்பட்டது. அவரது மனதுக்குள் என்ன எண்ணங்கள் ஓடுகிறது? அவரால் சிந்திக்க முடியுமா? அவரை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று புரிகிறதா? எதையும் புரிந்து கொள்ளாமல் அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்.

டிமென்ஷியா ரொம்பவும் கொடியது. ஒருவரின் சுயத்தையே இழக்க வைத்துவிடும். முழுக்க முழுக்க இன்னொருவரில் தங்கியிருக்க வேண்டிய நிலை. அவருக்கான மருந்துகள் மற்றும் பிற விடயங்கள் நிச்சயம் விலை அதிகமானவை. நானும் அண்ணாவும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் இருப்பதாலும் மருத்துவ ஆராய்ச்சித் துறையில் நான் இருப்பதனாலும், முழு நேரமும் அவரை ஒரு குழந்தையைப்போல அருகிலேயே இருந்து கவனித்துக்கொள்ள என் தந்தை இருப்பதாலும் என் அம்மாவுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களில் அல்லது கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில்  டிமென்ஷியா நோயாளி ஒருவர் இருந்தால் எப்படிச்சமாளித்துக்கொள்வார்கள்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. இந்தகாலத்தில் கூடவே இருந்து பார்த்துக்கொள்ளும் தாதி ஒருவரை வைப்பது எல்லோருக்கும் சாத்தியப்படாதே.

மேற்கண்ட கதையை பகிர்ந்து கொண்டவர் ஒரு தோழி. அவர் கூறிய விடயம் யோசிக்க வேண்டியது. டிமேன்ஷியாவுக்கான விழிப்புணர்வு அதிகரித்து வரும் காலங்களில் டிமேன்ஷியாவுக்கு உள்ளாகும் வயதானோரை பற்றி நாம் இப்போதெல்லாம் ஆங்காங்கு கேள்விப்படுகிறோம். அவர்களை சரியாக பராமரிக்க நம் சமூகத்தில் சரியான பொறிமுறைகள் உள்ளனவா?

கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லாவிட்டால் குடும்பம் இயங்காது என்னும் வாழ்க்கை செலவு அதிகரித்திருக்கும் காலம் இது.

நோயாளிகளை பராமரிக்கும் தாதிகள் கிடைப்பதே கடினம் அதிலும் வீட்டிற்கு வந்து பராமரித்துக்கொள்ளும் ஒருவரை வைப்பது மத்திய தர வகுப்பினரால் எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றே.  

முதியோர்களை பார்த்துக்கொள்ளும் சிறப்பான தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் டிமென்ஷியா போன்ற சிக்கலான நோயாளிகளை பார்த்துக்கொள்ளும் பயிற்றப்பட்ட ஊழியர்கள் உள்ளனர். ஆனால் அவையும் சாதாரண மத்திய தர வகுப்பினருக்கு கட்டுப்படியாவதில்லை. சாதாரண முதியோர் இல்லங்கள் குறைந்த பட்ச வளங்களை கொண்டே தங்கள் சேவைகளை ஆற்றி வருகின்றன. அவற்றில் டிமென்ஷியா போன்ற நோய்களை கையாளும் பயிற்றப்பட்ட  ஊழியர்கள் இருப்பதில்லை.

இலங்கையின் குடித்தொகை கட்டமைப்பு மாற்றத்தின் படி வயதானோர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிப்பதோடு 2037 ஆம் ஆண்டளவில் அறுபது வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் மொத்தக்குடித்தொகையில் 22 வீதமாக அதிகரிக்கப்போவதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. (https://srilanka.unfpa.org/en/publications/ageing-population-sri-lanka)

இலங்கையின் ராகம பகுதியில் நடாத்தப்பட்ட ஒரு ஆய்வொன்றின் படி 65 வயதுக்கு மேற்பட்டோரிடையே 4% டிமென்ஷியா மற்றும் அல்சீமர் நோய்க்கான அறிகுறிகளை கொண்டிருந்தார்கள் என்று உறுதியாகியுள்ளது. (https://www.ncbi.nlm.nih.gov/pubmed/12891639)

ஆகவே இநநோய்க்கான தயார்ப்படுத்தல்களை இப்போதே நம் நாடு மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனெனில் இந்நோயாளிகளை சாதாரண முதியோர்களை போல கவனித்துக்கொள்ள முடியாது. ஏற்கனவே இருக்கும் இல்லங்களில் பயிற்றப்பட்ட ஊழியர்களை நியமித்தல், தாதியியல் பயிற்றிகளில் இம்மாதிரியான சிக்கலான நோய்கள் கொண்ட முதியோரை பராமரிக்க ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குதல். நடுத்தர வசதிகளை கொண்ட குடும்பங்களுக்கு இவ்வாறான நிபுணத்துவ உதவிகள் கிடைக்க வகை செய்தல் போன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்துக்கு பேருதவியாக அமையும்.  

Views:
178