உளநலமும் சமூக பொறுப்பும்

by Yamini Perera
06-Jan-2020

உளநலமும் சமூக பொறுப்பும்

வருடந்தோறும் ஒக்டோபர் 10ஆம் திகதியன்று உலக உளநல தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பால் (WHO) இந்த நாள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் இலங்கையுட்பட ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருள்களை உள்ளடக்கி இந்த தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

முதன்முதலில் 1992 ஆம் ஆண்டு உலக உளநல மையத்தினால் உலக உளநல தினம் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 நாடுகளுக்கு மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிப்பதுடன் அவுஸ்திரேலியாவில் இதனை ஒரு வாரத்துக்கு பிரகடனப்படுத்தி கொண்டாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. உடலுக்கு ஒன்று ஏற்பட்டால் அது மனதை பாதிக்கிறது. அதேசமயம் மனதுக்கு ஒன்று என்றால் அது உடலை பாதிப்படையச் செய்துவிடுகிறது. இங்கு உளநலம் என்று குறிப்பிட்டு நோக்கும் பொழுது உடலும் மனமும் இணைத்து வைத்தே பார்க்கப்படுகிறது.

உடல், உளவியல், சமூக, ஆன்மீக ரீதியான மற்றும் நிதி நல்வாழ்வின் சமநிலை மூலமே முழுமையான ஆரோக்கியம் அடையப்படுகின்றது. ஒரு மனவடுவினை எதிர்கொள்ளும்போது தனிநபர்கள் இந்த முழுமையான சமநிலையில் ஒரு இடையூறினை அனுபவிப்பதுடன் அது மேலும் தனிநபர்கள் குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உறுப்பினர்கள் ஆகியோரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மனவடுவானது பொதுவாக ஒரு தனிநபரின் வாழ்க்கையில் ஏற்பட்ட துக்ககரமான அல்லது அதிர்ச்சிகரமான அல்லது சகித்துக்கொள்ள முடியாத சம்பவம் ஒன்றின் அல்லது பல மூலம் குறித்த நபருக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் ஆகும்.

துக்ககரமான அல்லது அதிர்ச்சிகரமான அல்லது சகித்துக்கொள்ள முடியாத சம்பவம் என்று குறிப்பிடும் போது அவை அனைவருக்கும் ஏற்பட கூடியதான சம்பவமாகும். உதாரணமாக அன்புக்குரியவர் ஒருவரின் இறப்பு, யுத்த வடுக்கள், குடும்ப பிரச்சினைகள், பாலின ரீதியான பிரச்சினைகள் என குறிப்பிட்டு கொண்டே போகலாம். இவை தவிர இன்னும் பல சம்பவங்கள் மக்களின் மனவடுவிற்குறிய காரணங்களாக அமையலாம்.     

எவ்வாறாயினும் இவை அனைவருக்கும் பொதுவானவை ஆகும். இப்படியான சம்பவங்களின் போது ஒருசிலர் அவற்றை எதிர்கொள்வார்கள் இன்னும் சிலர் மற்றவர்களின் உதவியை நாடிச் செல்வார்கள் ஆனால் சிலர் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாமலும் அவற்றை எதிர்த்து போராட முடியாமலும் தனக்குள் அனைத்தையும் அடக்கிக்கொள்ள முயற்சிப்பார்கள் அவ்வாறானவர்களே எளிதில் மனவடுவிற்கு ஆளாகின்றார்கள்.  

இப்படி மனவடுவிற்கு ஆளானவர்களை கேலி செய்தல், அவர்களின் பலவீனத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தல் மற்றும் சமூகத்திலிருந்து அவர்களை ஒதுக்குதல் (சமூக அந்தஸ்தினை இழிவுபடுத்தல்) போன்ற மோசமான செயற்பாடுகளை எமது சமூகம் அவர்களுக்கெதிராக மேற்கொள்கிறது. இதனால் சமூகத்தின் மீதான நம்பிக்கை இல்லாதவர்களாகவும் தமது பிரச்சினைகளை நம்பிக்கைக்குரியவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவர்களாகவும் அவர்களது நிலைமை இன்னும் மோசமான நிலைக்கு செல்ல சமூகமே மூலக்காரணியாகும்.

சமூகத்தின் பொறுப்பு என்ன?

இவ்வாறு மனவடுவிற்கு ஆளானவர்கள் மனநோயாளியோ அல்லது சிந்தித்து செயற்பட முடியாதவர்களோ அல்ல அவர்கள் எங்களை போல் சாதாரண மனிதர்களே. அவர்கள் அனுபவித்த அல்லது அனுபவிக்கும் துக்ககரமான சம்பவம் அல்லது சம்பவங்கள் அவர்களை மனதளவில் பலவீனமடையச் செய்து சமூகத்துடன் ஒன்றித்து வாழ முடியாதளவுக்கு பின்னடைவினை எதிர்கொள்ள வைத்துள்ளது.   

இவ்வாறு உளநல பிரச்சினைகளை முகங்கொடுக்க கூடியவர்களை அணுகி அவர்களுக்கு நீங்கள் உதவ முன் வருவீர்கள் எனும் நம்பிக்கையினை முதலில் ஏற்படுத்துங்கள். அதாவது அவர்களையும் ஏனையோரை போல் மதித்து அவர்களுடன் பண்பாக உரையாடுங்கள். உளநலம் சார்ந்த சேவைகளை முறையாக பெற்றுக்கொள்ள வழிகாட்டுங்கள். அவ்வாறு உளநலத்துணை சேவைகளை பெறுவதன் தேவையினை உணர்ந்துங்கள்.  

உதாரணமாக இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச செயலகத்திலும் இலவசமாக உளவளத்துணை சேவையினை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் உளவளவாளர்கள் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதை தெரியப்படுத்தல், அதேபோல் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் உளநலம் சார்ந்த சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவி செய்தல் போன்றன அவர்களை மிக விரைவாக அவர்களது மனவடுக்களிலிருந்து மீண்டுவர பொரிதும் உதவி செய்யும்.  

ஆகவே மனவடுக்களுடன் நாளாந்த வாழ்க்கையினை கடத்திச் செல்லும் மக்களை இழிவு படுத்தாமல் மற்றும் தமது சொந்த தேவைகளுக்கு அடிமைப்படுத்தாமல் அவர்களது உளநல மேம்பாட்டு தேவையறிந்து அவர்களுக்கான உதவிகளை எங்களால் முடியுமானவரை மேற்கொள்வோம்.

இக்கட்டுரையானது குடும்ப புனர்வாழ்வு நிலையம் (FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் உளநல வாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளும் உளநல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Views:
623